கனமழையால் 151 ஆண்டுகள் பழமையான தேவாலயம் இடிந்து விழுந்தது..! கேரளாவை வாட்டி வதைக்கும் வெள்ளம்..!
11 August 2020, 5:48 pm151 ஆண்டுகள் பழமையான செயின்ட் பால் சி.எஸ்.ஐ தேவாலயம் இன்று காலை கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் சுங்கம் குருவெல்லி பதசேகரம் பகுதியில் இடிந்து விழுந்தது.
தேவாலயம் இரண்டு நெல் வயல்களுக்கு நடுவில் அமைந்திருந்ததால், கூரை இடிந்து தண்ணீரில் விழுந்துள்ளது. வெள்ளம் குறித்தது அதிகாரிகள் முன்பே எச்சரித்ததால், அப்பகுதியின் உள்ளூர்வாசிகள் ஏற்கனவே பாதுகாப்பான இடத்திற்கு மாறிவிட்டனர். இதனால் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் எதுவும் பதிவாகவில்லை.
கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையால் இப்பகுதியில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் பெரும்பாலான இடங்களில் மழை / இடியுடன் கூடிய மழை காணப்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) இன்று தெரிவித்துள்ளது.
முன்னதாக பருவமழை கேரளாவை புரட்டிப் போட்டு வரும் நிலையில், இடுக்கி உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அங்கு மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் மும்பை மற்றும் வடக்கு, வடகிழக்கு என கிட்டத்தட்ட 6 மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. ஒரு பக்கம் கொரோனா சிக்கலை அரசு கையாண்டு வரும் நிலையில், இந்த மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால், மக்கள் இரட்டிப்புத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.