ஜாமியா பல்கலை., வளாகத்தில் டேனிஷ் சித்திக் உடல் நல்லடக்கம்: ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி..!!

19 July 2021, 8:53 am
Quick Share

புதுடெல்லி: தலிபான்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த ‘புலிட்சர்’ விருது பெற்ற புகைப்பட கலைஞர் டேனிஷ் சித்திக்கின் உடல் டெல்லி ஜாமியா பல்கலை வளாகத்தில் உள்ள அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மும்பையை சேர்ந்த டேனிஷ் சித்திக் ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி நிறுவனத்தில் மூத்த புகைப்படக் கலைஞராக பணியாற்றி வந்தார். ரோஹிங்கியா அகதிகளின் அவலம் குறித்து இவர் எடுத்த புகைப்படங்கள் இவருக்கு புலிட்சர் விருதை பெற்றுக் கொடுத்தது.

Danish_Siddhiqui - updatenews360

ஆப்கானிஸ்தானில் அரசு படைகளுக்கும் தலிபான் பயங்கரவாத அமைப்பினருக்கும் இடையில் நடந்து வரும் சண்டையை புகைப்படங்களாக எடுக்க சென்ற குழுவில் இடம்பிடித்திருந்தார். கடந்த 16ம் தேதி ஆப்கனின் கந்தகர் பகுதியில் தலிபான் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையினருடன் இருந்த சித்திக் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரது உடல் நேற்று டெல்லிக்கு எடுத்து வரப்பட்டது. அவரது உடலை டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலை வளாகத்தில் உள்ள அடக்க ஸ்தலத்தில் நல்லடக்கம் செய்ய அதன் துணை வேந்தர் அனுமதி அளித்துள்ளார். டேனிஷ் சித்திக் ஜாமியா பல்கலையின் முன்னாள்மாணவர். இவரின் தந்தை அக்தர் சித்திக் இந்த பல்கலையின் ‘டீன்’ ஆக பணியாற்றியவர்.

டேனிஷ் பெற்றோர் முன்வைத்த கோரிக்கையை ஏற்று அவரது உடலை பல்கலை வளாக அடக்க ஸ்தலத்தில் நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இங்கு பல்கலை ஊழியர்கள் அவர்களின் வாழ்க்கை துணை மற்றும் அவர்களின் மைனர் குழந்தைகளை அடக்கம் செய்ய மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆப்கான் அதிகாரிகள் அளித்துள்ள டேனிஷ் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் ஏராளமான துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், செஞ்சிலுவை சங்கம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் எடுத்த முயற்சியால் அவர் உடல் கொண்டு வரப்பட்டது.

Views: - 130

0

0