மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் உள்பட 3 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது: பலத்த பாதுகாப்பு..!!

Author: Aarthi Sivakumar
30 September 2021, 8:23 am
Quick Share

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் உள்பட 3 தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்காளத்தில் மூன்று தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. பவானிபூர் தொகுதியில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். பவானிபூர் தவிர, முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ஷம்ஷெர்கஞ்ச் மற்றும் ஜாங்கிபூர் ஆகிய இடங்களிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அமைதியாக நடைபெற 72 கம்பெனி மத்திய பாதுகாப்புப்படை குவிக்கப்பட்டுள்ளது.

இதில் பவானிபூர் தொகுதிக்கு மட்டும் 35 கம்பெனி வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 97 வாக்கு மையத்தில் உள்ள 287 பூத்தில் இவர்கள் பாதுகாப்பு பணியை மேற்கொள்வார்கள். ஒரு பூத்திற்கு மூன்று மத்திய போலீசார் பாதுகாப்பிற்கு போடப்பட்டுள்ளனர். வாக்கு மையத்தில் இருந்து 200 மீட்டர் தூரம் வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநில போலீசார் பவானிபூர் தொகுதி வாக்குப்பதிவு பூத்திற்கு வெளியில் பாதுகாப்பு பணியை மேற்கொள்வார்கள். அவர்கள் 38 இடங்களில் தடுப்புகளை ஏற்படுத்தி பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள். வாக்குப்பதிவு நடைபெறும் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், வருகிற 3ம் தேதி வாக்குகள் எண்ணப்படும். பவானிபூரில் மம்தா பார்னஜியை எதிர்த்து பாஜக சார்பில் பிரியங்கா போட்டியிடுகிறார். முன்னதாக மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் இடைத்தேர்தலில் பெருமளவு முறைகேடுகள் நடைபெறுவதால் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்தமனுவை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்ததுடன் திட்டமிட்டபடி இன்று தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 249

0

0