சினிமா பட பாணியில் பெட்ரோல் டேங்கர் லாரியில் கடத்தப்பட்ட கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது…

Author: kavin kumar
7 February 2022, 10:38 pm
Quick Share

ஆந்திரா : ஆந்திராவில் பெட்ரோல் டேங்கர் லாரியில் மறைத்து கடத்தப்பட்ட 2 டன் கஞ்சாடிவை போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் விஜயநகரம், விசாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை ஒட்டியிருக்கும் மலைக்கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான அளவில் ஏக்கர் அளவில் கஞ்சா சட்டவிரோத சாகுபடி ஜோராக நடைபெற்று வருகிறது. அங்கிருந்து இந்தியா முழுவதும் கஞ்சா சப்ளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற தீவிர முடிவில் இருக்கும் சில மாநிலங்கள் இது தொடர்பாக ஆந்திர மாநில அரசுக்கு அழுத்தம் கொடுத்தன. எனவே மலை பகுதிகள், அடர்ந்த வனப் பகுதிகள் ஆகியவற்றில் கஞ்சா சாகுபடி செய்யப்பட்டுள்ள இடங்களை கண்டுபிடித்து அவற்றை அழித்து ஒழிக்கும் பணியில் ஆந்திர போலீசார் ஈடுபட்டனர்.

அடர்ந்த காட்டுப் பகுதியில் இருக்கும் கஞ்சா தோட்டங்களை கண்டுபிடிப்பதற்காக ட்ரோன்களையும் ஆந்திர போலீசார் பயன்படுத்தினர். இதன்மூலம் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா தோட்டங்கள் அழிக்கப்பட்டன. ஆனாலும் இன்னும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருக்கும் கஞ்சாவை விசாகப்பட்டினம், விஜயநகரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து இந்தியா முழுவதும் சப்ளை செய்வது தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்த பெட்ரோல் டேங்கர் லாரி ஒன்றை சிங்கவரப்புகோட்டை அருகே உள்ள சோதனை சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் மூட்டை மூட்டையாக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக லாரி டிரைவர் மற்றும் அதிலிருந்த மற்றொருவர் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்துகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் விஜயநகரம் மாவட்டத்திலிருந்து ஹைதராபாத்திற்கு கஞ்சா கடத்தல் நடைபெற்றது தெரியவந்துள்ளது.இதனை அடுத்து அதிலிருந்த சுமார் 2000 கிலோ (2 டன்) எடை கொண்ட கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 967

0

0