பாஜகவில் சேர மாட்டேன்… ஆனா, காங்கிரசில் இருக்க மாட்டேன் : அமரீந்தர்சிங்கின் அடுத்த அதிரடி இதுதான்..?
Author: Babu Lakshmanan30 September 2021, 5:35 pm
காங்கிரஸில் இருந்து விலகப்போவதாக தெரிவித்துள்ள முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர்சிங், பாஜகவில் இணையப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநில முதலமைச்சராக இருந்தவர் அமரீந்தர் சிங். இவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சித்து, முதலமைச்சருக்கு எதிராக போர்க்கொடி தூக்க ஆரம்பித்தார். மேலும், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, சொந்த கட்சிக்கே நெருக்கடி கொடுத்தார். மேலும், தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆட்சியை கவிழ்த்து விடுவதாக மிரட்டி வந்தார். இந்த விவகாரத்தை உணர்ந்த காங்கிரஸ் கட்சியின் தலைமை, சித்துவை சமாதானப்படுத்த, பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை தூக்கிக் கொடுத்தது.
சோனியா மற்றும் ராகுல் காந்தியின் இந்த செயலை முதலமைச்சர் அமரீந்தர் சிங் நேரடியாகவே அதிருப்தி தெரிவித்தார். ஒரு கட்டத்தில் உட்கட்சியில் தனக்கு எதிரான கோஷ்டி வலுவடைந்ததை உணர்ந்த, கேப்டன் அமரீந்தர் சிங், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இது சித்துவுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்பட்டது.
சரி, போட்டியில் இருந்து ஒருவர் விலகியதால் இனி காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்வரும் தேர்தலில் சித்துவை முதலமைச்சர் வேட்பாளராக காங்கிரஸ் நிறுத்தினால், அவருக்கு எதிராக பலமான வேட்பாளரை நிறுத்துவேன், என்று பகீரங்க எச்சரிக்கை விடுத்தார் அமரீந்தர்சிங்.
இந்த சூழலில், முதலமைச்சர் தேர்வு, நிர்வாகிகள் தேர்வு உள்ளிட்டவற்றில் ஏற்பட்ட அதிருப்தியால், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சித்து விலகுவதாக அறிவித்து பஞ்சாப் காங்கிரசுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்தார். இன்னும் சில மாதங்களில் பஞ்சாபில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒவ்வொருவராக விலகி வருவது ராகுல், சோனியாவுக்கு அதிர்ச்சியை உருவாக்கியது.
இதனிடையே, பஞ்சாப் அரசியலில் குழப்பம் நீடிக்கும் நிலையில், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவல் ஆகியோரை முன்னாள் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் சந்தித்து பேசினார். இதன்மூலம், அவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. இதைத் தொடர்ந்து, இன்று தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் காங்கிரஸ் எனக் குறிப்பிட்டிருந்த வார்த்தையை நீக்கினார். அவரது இந்த செயல் பஞ்சாப் அரசியலில் மேலும் பரபரப்பை உருவாக்கியது. இதனால், அவர் பாஜகவில் சேருவது உறுதி என்ற பேச்சுக்கள் அடிபட்டன.
இந்த நிலையில், தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அமரீந்தர்சிங், இனியும் நான் அவமானப்பட விரும்பவில்லை. இதுவரையில் காங்கிரஸில் இருந்து நான் விலகவில்லை. ஆனால், விரைவில் விலகிவிடுவேன். இந்த முடிவை நான் உடனே எடுக்கவில்லை. எனக்கு காங்கிரஸில் தொடர்ந்து நீடிக்க விருப்பம் இல்லை. அதேவேளையில், நான் பாஜகவில் இணையப் போவதும் இல்லை,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸில் இருந்து அமரீந்தர் சிங் விலகுவது அனைவராலும் எதிர்பார்த்திருந்த விஷயமாக இருந்தாலும் கூட, பாஜக தலைவர்களை சந்தித்த பிறகும் பாஜகவில் இணையப் போவதில்லை என்று அவர் கூறியதுதான் இங்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அப்படியென்றால், அவர் புதிய கட்சி தொடங்க இருப்பதைத் தான் அவர் மறைமுகமாக சொல்லி இருப்பதாக கூறும் அரசியல் நோக்கர்கள், புதிய கட்சியின் மூலம் பஞ்சாப்பில் காங்கிரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்த அவர் திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர்.
0
0