தீவிரவாதிகள் ஊடுருவ இவ்ளோ பெரிய சுரங்கமா..? பாகிஸ்தான் எல்லையில் ஷாக் கொடுத்த பிஎஸ்எஃப் அதிகாரிகள்..!

29 August 2020, 6:17 pm
BSF_Tunnel_Jammu_Updatenews360
Quick Share

ஜம்மு காஷ்மீரின் சம்பா பிராந்தியத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் மறைவாக அமைக்கப்பட்டிருந்த சுரங்கப்பாதையை எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) கண்டறிந்துள்ளதை அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தினர்.

பாகிஸ்தானில் தொடங்கி ஜம்முவில் முடிவடையும் இந்த சுரங்கப்பாதையை பாகிஸ்தான் அதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல் கட்டியிருக்க முடியாது என்றும், இது தொடர்பாக இந்தியா ஒரு வலுவான எதிர்ப்பை பதிவு செய்யும் என்றும் பி.எஸ்.எஃப் கூறுகிறது.

சம்பா பகுதியில் ஒரு சுரங்கப்பாதை இருப்பதைப் பற்றி பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது என்றும் ஒரு சிறப்புக் குழு நேற்று சுரங்கப்பாதையை கண்டுபிடித்ததாகவும் ஜம்மு பிஎஸ்எஃப் ஐஜி, என்எஸ் ஜாம்வால் தெரிவித்தார். சுரங்கப்பாதையின் முனை மணல் மூட்டைகளால் மூடப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது.

மணல் மூட்டைகளில் பாகிஸ்தானின் சரியான அடையாளங்கள் உள்ளன. இது சரியான திட்டமிடல் மற்றும் பொறியியல் முயற்சிகளால் தோண்டப்பட்டதை தெளிவாகக் காட்டுகிறது என்று ஜாம்வால் கூறினார்.

இந்த சுரங்கப்பாதை சுமார் 20 அடி நீளமும், எல்லை வேலிக்கு அருகிலுள்ள இந்திய பிரதேசத்தில் 3-4 அடி விட்டம் கொண்டது என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

“ஷாகர்கர் / கராச்சி என எழுதப்பட்ட பாகிஸ்தான் தயாரித்த மணல் மூட்டைகள் அதை மறைக்க சுரங்கப்பாதையின் வாயிலில் வைக்கப்பட்டன. சுரங்கப்பாதை திறக்கும் இடம் சர்வதேச எல்லையில் இருந்து இந்திய பக்கத்தை நோக்கி 170 மீட்டர் தொலைவில் உள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.

பாகிஸ்தான் அரசாங்கத்தை கடுமையாக சாடி, ஜம்மு பி.எஸ்.எஃப் ஐ.ஜி, பாகிஸ்தான் ரேஞ்சர் மற்றும் பிற ஏஜென்சிகளின் ஒப்புதல் இல்லாமல் இவ்வளவு பெரிய சுரங்கப்பாதை கட்ட முடியாது என்று கூறினார்.

இதுதொடர்பான அடுத்த நடவடிக்கை குறித்து விவாதித்த ஜாம்வால், “குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு பாகிஸ்தான் அதிகாரிகளிடம் வலுவான எதிர்ப்பு தெரிவிக்கப்படும்” என்றார்.

இதற்கிடையில், பஞ்சாபில் அண்மையில் ஐந்து ஊடுருவல்காரர்கள் கொல்லப்பட்டதிலிருந்து, ஜம்மு மற்றும் பிற இடங்களில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதிகளில் எல்லை பாதுகாப்புப் படை ஒரு மெகா சுரங்கப்பாதை இயக்கத்தை நடத்தி வருகிறது.

இந்த சம்பவம் வெளியானதை அடுத்து ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத்துடன் இணைந்து இயங்கும் 3,300 கி.மீ சர்வதேச எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள முழு பி.எஸ்.எஃப் கட்டமைப்பும் தற்போது கூடுதல் எச்சரிக்கையுடன் உள்ளது.

Views: - 2

0

0