அம்பானி வீட்டின் அருகில் வெடிபொருட்கள் நிரம்பிய கார் கண்டுபிடிப்பு..! தாக்குதல் நடத்த திட்டமா..?
25 February 2021, 8:41 pmஉலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான மும்பையில் உள்ள ஆண்டிலியா இல்லத்திற்கு அருகே ஜெலட்டின் குச்சிகளைக் கொண்ட கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முகேஷ் அம்பானி இந்தியாவின் பணக்காரராக மட்டுமல்லாமல் உலகின் மிகப்பெரும் 10 பணக்காரர்களில் ஒருவராகவும் திகழ்கிறார். மத்திய அரசு கடந்த வருடம் செப்டம்பரில் கொண்டு வந்த விவசாயிகள் சட்டம் அம்பானிக்கு தான் நன்மை பயக்கும் எனக் கூறி விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தில் ஆரம்ப கட்டங்களில், பஞ்சாபில் உள்ள முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு சொந்தமான டெலிபோன் டவர்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று, மும்பையில் முகேஷ் அம்பானி வசிக்கும் ஆண்டிலியா இல்லத்திற்கு அருகே, கார் ஒன்று அனாதையாக நிறுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசுக்கு தகவல் கொடுத்து அவர்கள் சோதனை செய்ததில், வெடி மருந்துகளாக பயன்படுத்தும் ஜெலட்டின் குச்சிகள் கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குறிப்பிட்ட அந்த பகுதியை சீல் வைத்து முழுமையாக ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து போலீஸ் கமிஷனருடன் தொடர்பில் இருப்பதாகவும், தேவை ஏற்பட்டால் முகேஷ் அம்பானி குடும்பத்தின் பாதுகாப்பை உயர்த்துவோம் என்றும் மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.
0
0