காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தில் தடை வாங்குவோம்..! கர்நாடக அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை..!

24 February 2021, 2:31 pm
Ramesh_Jarkiholi_UpdateNews360
Quick Share

கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா 14,400 கோடி ரூபாய் மதிப்பிலான தமிழகத்தின் காவிரி-வைகை-குண்டாறு (262 கி.மீ) நதி நீர் இணைப்புத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், தற்போது கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி, தமிழகத்தின் திட்டத்திற்கு தடை கோரி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம் எனத் தெரிவித்துள்ளார்.

காவிரி நதிநீர் பங்கீட்டு உத்தரவின் படி, 177.25 டி.எம்.சி அடி தண்ணீரை தமிழ்நாட்டிற்கு உறுதி செய்த பின்னர், 284.75 டி.எம்.சி நீரை கர்நாடகம் வைத்துக்கொள்கிறது. இது தவிர உபரி நீரும் கிடைக்கிறது.  

இந்நிலையில் இந்த உபரி நீர் கடலில் கலந்து வீணாவதைத் தடுத்து, அதிக வறட்சி பாதிப்பைக் கொண்டுள்ள தென் தமிழக மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில், தமிழக அரசு காவிரி-வைகை-குண்டாறு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், இந்த திட்டத்தை மேற்கொள்ளும் முன் காவிரி நடுவர் மன்றத்திலிருந்து ஒப்புதல் பெற வேண்டும் என்றும், உபரி நீரை தமிழகம் பயன்படுத்துவதை எதிர்ப்போம் என்றும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேற்று தெரிவித்திருந்தார்.

கர்நாடக முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, குமாரசாமி போன்ற தலைவர்களும் ஒருமித்த குரலில், தமிழகம் இந்த திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க முடியாது எனக் கூறியுள்ளனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கர்நாடக அரசு மத்திய ஜல் சக்தி அமைச்சரிடம் இந்த விவகாரம் குறித்து முறையிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கர்நாடக நீர்பாசனத் துறை அமைச்சர்  ரமேஷ் ஜர்கிஹோலி இதற்கான பணிகளை முன்னெடுத்துச் செல்ல டெல்லியில் முகாமிட்டுள்ளார்.

இந்நிலையில் மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்த ரமேஷ் ஜர்கிஹோலி, தனது மாநில நலன்களைப் பாதுகாக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று கூறியிருந்தார். “நாங்கள் விரைவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி இது குறித்து விவாதிப்போம்.” என்று அவர் கூறினார்.

இந்நிலையில், கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் தற்போது, தமிழகத்தின் திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தடை வாங்குவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடகாவில் ஆளும் கட்சியாக பாஜக உள்ள நிலையில், தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இது தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

Views: - 12

0

0