ஊழல் அம்பலம்..! சிபிஐயில் பணிபுரியும் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட மூவரைக் கைது செய்தது சிபிஐ..!

21 January 2021, 9:10 am
CBI_UpdateNews360
Quick Share

மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) தனது சொந்த டிஎஸ்பி ஆர்.கே.ரிஷி, இன்ஸ்பெக்டர் கபில் தங்காட் மற்றும் வழக்கறிஞர் மனோகர் மாலிக் ஆகியோரை லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக கைது செய்துள்ளது.

முன்னதாக, தியோபந்தில் உள்ள டிஎஸ்பி ஆர்.கே.ரிஷியின் இல்லத்தையும், ரூர்க்கியில் உள்ள அவரது மனைவியின் வீட்டையும் சிபிஐ ஆய்வு செய்ததில், குற்றத்தை உறுதி செய்வதற்கு தேவையான ஆவணங்கள் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் மற்றும் வழக்கறிஞரை கைது செய்து சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 5 நாள் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

முன்னதாக, கடந்த வாரம், இதே போல் சிபிஐ குற்றம் சாட்டப்பட்டவர்களின் வளாகத்தில் டெல்லி, காசியாபாத், நொய்டா, குருகிராம், மீரட், கான்பூர் உள்ளிட்ட 14 இடங்களில் தேடல்களை நடத்தியது. அப்போது டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட நான்கு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்திருந்தது.

சிபிஐ கண்காணிப்பின் கீழ் உள்ள அதிகாரிகள் சிபிஐ தலைமையகத்திற்குள் லஞ்சம் வாங்கியதாகவும், வங்கி மோசடி தொடர்பாக விசாரிக்கப்படும் நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு சாதகமாக நடந்துகொள்வதாக வெளியான குற்றச்சாட்டுக்களை அடுத்து, சிபிஐ தன் அமைப்பில் உள்ள கருப்பு ஆடுகளை களையெடுக்க ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0