“100 கோடி மாமூல்” வழக்கில் அனில் தேஷ்முக் விசாரணைக்கு ஆஜராக சம்மன்..! சிபிஐ உத்தரவு..!

12 April 2021, 8:06 pm
anil_deshmukh_cbi_updatenews360
Quick Share

தனக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக வரும் புதன்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு மகாராஷ்டிராவின் முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கிற்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. 

முன்னதாக, மும்பை முன்னாள் காவல்துறைத் தலைவர் பரம் பிர் சிங் அணில் தேஷ்முக்கிற்கு எதிராக ரூ 100 கோடி மாமூல் வசூலிப்பது தொடர்பாக சுமத்திய குற்றச்சாட்டுகள் குறித்து முதற்கட்ட விசாரணை நடத்துமாறு மும்பை உயர் நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டதையடுத்து, ஏப்ரல் 5’ஆம் தேதி அனில் தேஷ்முக் பதவி விலகினார்.

எஸ்யூவி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மும்பை உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் சச்சின் வேஸை அனில் தேஷ்முக் மும்பையின் உணவகங்கள், பார்கள் மற்றும் ஹூக்கா பார்களில் இருந்து மாதந்தோறும் ரூ 100 கோடி மாமூல் வசூலிக்குமாறு கேட்டுக் கொண்டதாக பரம் பிர் சிங் சிங் ஒரு முக்கிய குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

ஆன்டிலியா வழக்கில் வேஸ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மார்ச் 17’ஆம் தேதி குறைந்த முக்கியத்துவம் உள்ள பதவிக்கு மாற்றப்பட்ட பரம் பிர் சிங், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதிய கடிதத்தில், தான் இந்த வழக்கில் பலிகடாவாக ஆக்கப்பட்டதாகக் கூறியிருந்தார். எட்டு பக்க கடிதத்தில், அனில் தேஷ்முக் தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு போலீஸ் அதிகாரிகளை அழைத்து பார்கள், உணவகங்கள் மற்றும் பிற நிறுவனங்களிலிருந்து மாமூல் வசூலிக்க இலக்கு கொடுப்பதாக பரம் பிர் சிங் குற்றம் சாட்டியிருந்தார்.

அனில் தேஷ்முக் மற்றும் சச்சின் வேஸ் எபிசோடிற்கு எதிரான பரம் பிர் சிங்கின் குற்றச்சாட்டுகள் மாநிலத்தில் மகா விகாஸ் அகாதி அரசாங்கத்தின் பிம்பத்தை கடுமையாக பாதித்துள்ளது. கடந்த மாதம் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் தெற்கு மும்பை இல்லத்திற்கு வெளியே இருந்து வெடிபொருட்களை ஏற்றிய வாகனம் மீட்கப்பட்டதையும், அந்த எஸ்யூவியின் உரிமையாளரான தொழிலதிபர் மன்சுக் ஹிரனை கொலை செய்ததையும் விசாரிக்கும் என்ஐஏவால் வேஸ் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக தேஷ்முகின் இரண்டு தனிப்பட்ட ஊழியர்களை நேற்று சிபிஐ விசாரித்தது. இந்த வழக்கு தொடர்பான ஆரம்ப விசாரணை தொடர்பாக தேஷ்முகின் தனிப்பட்ட உதவியாளர் குண்டன் ஷிண்டே மற்றும் தனிப்பட்ட செயலாளர் சஞ்சீவ் பாலாண்டே ஆகியோர் சிபிஐ குழு முன் ஆஜராகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவர்களை சிபிஐ புறநகர் சாண்டாக்ரூஸில் உள்ள டிஆர்டிஓ விருந்தினர் மாளிகையில் விசாரித்தது.

Views: - 73

0

0