நில மோசடி வழக்கில் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மீது குற்றச்சாட்டு..! சிபிஐ நீதிமன்றம் விசாரணை..!

16 April 2021, 4:30 pm
Bhupinder_Singh_Hooda_UpdateNews360
Quick Share

அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (ஏ.ஜே.எல்) நிறுவனத்திற்கு முறைகேடான முறையில் நிலம் ஒதுக்கீடு செய்தது தொடர்பான வழக்கில், முன்னாள் ஹரியானா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை பஞ்ச்குலாவில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் உறுதி செய்தது.

குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டபோது ஹூடா நீதிமன்றத்தில் ஆஜரானார்.

முன்னதாக , ஹூடாவை இந்த வழக்கிலிருந்து விடுவிப்பது மற்றும் குற்றச்சாட்டுகளை உருவாக்குதல் தொடர்பான வாதங்கள் நீதிமன்றத்தில் நேற்று முடிக்கப்பட்டன. வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஹூடாவின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

குற்றச்சாட்டு இறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு மே 7’ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று வழக்கறிஞர் கூறினார். ஹூடா மற்றும் அண்மையில் காலமான காங்கிரஸ் தலைவர் மோதி லால் வோரா ஆகியோர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆவர்.

பஞ்ச்குலாவில் ஒரு நிலத்தை மறு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில், ஏ.ஜே.எல் தலைவராக இருந்த வோரா மற்றும் ஹூடா ஆகியோருக்கு எதிராக மத்திய புலனாய்வுத் துறை 2018 டிசம்பரில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

நிலத்தை ஏ.ஜே.எல்-க்கு மறு ஒதுக்கீடு செய்ததால், அரசு கருவூலத்திற்கு ரூ 67 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ கூறியது.

1982’ஆம் ஆண்டில் ஏ.ஜே.எல்.’க்கு பஞ்ச்குலாவில் ஒரு நிலம் ஒதுக்கப்பட்டது என்று சிபிஐ கூறியது. அதில் 10 ஆண்டுகளாக எந்த கட்டுமானமும் நடைபெறவில்லை. அதன் பின்னர் ஹரியானா நகர அபிவிருத்தி ஆணையம் நிலத்தை மீண்டும் கைப்பற்றியது. இருப்பினும், 2005’ஆம் ஆண்டில், விதிமுறைகளை மீறி அதே நிலம் மீண்டும் பழைய விகிதத்தில் ஏ.ஜே.எல். நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

2005’இல் முதலமைச்சராக இருந்த ஹூடா ஹரியானா நகர அபிவிருத்தி ஆணைய தலைவராகவும் இருந்தார்.

அமலாக்க இயக்குநரகமும் இந்த வழக்கை விசாரித்து வந்தது. முன்னதாக பஞ்ச்குலாவில் உள்ள ஏ.ஜே.எல் நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் அதன் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தது.

“மே, 2008 முதல் மே 10, 2012 வரை, 2014 ஆம் ஆண்டில் ஏ.ஜே.எல் கட்டுமானத்தை முடிக்கும் வரை, இந்த நிலத்தில் கட்டுமானத்திற்காக மூன்று தேவையற்ற நீட்டிப்புகளை வழங்குவதன் மூலம் ஹூடா ஏ.ஜே.எல் நிறுவனத்திற்கு ஆதரவளித்தார்.” என்று அமலாக்கத்துறை முன்பு ஒரு அறிக்கையில் குற்றம் சாட்டியது.

தனது உத்தியோகபூர்வ நிலையை அப்பட்டமாக தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் ஹூடா நிலத்தை ஏ.ஜே.எல்’க்கு ஒதுக்கியதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தொடர்புடைய அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் -நேஷனல் ஹெரால்ட் மோசடி வழக்கும் டெல்லியில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 23

0

0