போலி மதுபானம் அருந்தி இருவர் பலி..! பஞ்சாப்பைத் தொடர்ந்து சத்தீஸ்கரிலும் தொடரும் சோகம்..!

8 August 2020, 6:35 pm
Hooch_UpdateNews360
Quick Share

சத்தீஸ்கரில் கோர்பா மாவட்டத்தில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபானம் குடித்து இரண்டு பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று இரவு பாக்கிமொங்ரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பால்கிகர் கிராமத்தில் நடந்ததாக நகர காவல் கண்காணிப்பாளர் கே எல் சின்ஹா ​​தெரிவித்தார்.

உயிரிழந்தவர்கள் பார்சாடி யாதவ், திஜ்ராம் சாஹு என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 
மற்றொரு நபர், ராஜேஷ் யாதவ் என்பவர் மது அருந்திய பின்னர் நோய்வாய்ப்பட்டு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று போலீசார் மேலும் தெரிவித்தனர். இந்த மூவரும் உறவினர்கள் என்று கூறப்படுகிறது.

முதற்கட்ட தகவல்களின்படி, அடாரி கோர்பி கிராமத்தில் வசித்து வந்த பார்சாடி யாதவ், மற்ற இருவரையும் சந்திக்க பால்கிகார் சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது.

திஜ்ராம் மற்றும் ராஜேஷ் ஆகியோர் நேற்று மாலை அருகிலுள்ள தப்தாப் கிராமத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வந்த மஹுவா பூக்களிலிருந்து தயாரிக்கப்பட்ட மதுபானத்தை வாங்கியதாக சின்ஹா தெரிவித்தார்.

இதையடுத்து சட்ட விரோத மதுபானத்தை அருந்தி நிலைமை மோசமான பின்னர், சில உள்ளூர்வாசிகள் அவர்களை மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றினர். அங்கு பார்சாடி யாதவ் மற்றும் திஜ்ராம் சாஹு இறந்ததாக அறிவிக்கப்பட்டதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் மரணத்திற்கான சரியான காரணம் அறியப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திலிருந்து ஆதாரங்களை சேகரித்து தடயவியல் பரிசோதனைகளுக்கு அனுப்பினர். மேலும் விசாரணை நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.

சமீபத்தில் 120’க்கும் மேற்பட்டோரை காவு வாங்கிய பஞ்சாப் சட்டவிரோத மதுபான விவகாரமே இன்னும் முடியாத நிலையில், தற்போது இதே போன்ற ஒரு சம்பவம் சத்தீஸ்கரிலும் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 0 View

0

0