இனி செம்மரம் கடத்தலில் ஈடுபட்டால் இது தான் தண்டனை : திருப்பதியில் தனி நீதிமன்றத்தை துவக்கி வைத்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா எச்சரிக்கை!

Author: Udayachandran RadhaKrishnan
9 June 2022, 8:47 pm
New court - Updatenews360
Quick Share

திருப்பதி : செம்மரக் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க திருப்பதியில் தனி நீதிமன்றத்தை தலைமை நீதிபதி என். வி. ரமணா திறந்து வைத்தார்.

திருப்பதியில் உள்ள நகர்புற அபிவிருத்தி கழக வணிக வளாகத்தில் புதிதாக செம்மர கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனை இன்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா திறந்து வைத்தார்.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் சேஷாசலம் மலைப்பகுதியில் வளரும் செம்மரங்களை வெட்டி கடத்துவது கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இதனை தடுப்பதற்கு அரசு எத்தனையோ முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால் செம்மரங்களுக்கு வெளிநாடுகளில் கிடைக்கும் அதிக விலை காரணமாக இந்த கடத்தல் தொடர்ந்து நடைபெறுகிறது.

கடத்தலில் ஈடுபட்டு போலீசில் சிக்குபவர்கள் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்தி குறைந்த தண்டனையுடன் சிறையில் இருந்து வெளியில் வந்து மீண்டும் கடத்தலில் ஈடுபடுகின்றனர்.

எனவே 2016 ஆம் ஆண்டில் முதல்முறை கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையுடன் மூன்று லட்ச ரூபாய் அபராதம் விதிக்கவும் இரண்டாவது முறை அதே குற்றத்தை செய்பவருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையுடன் 7 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கவும் சட்டம் இயற்றப்பட்டது.

ஆனால் செம்மரக் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் இல்லாத காரணத்தால் இந்த சட்டத்தின் கீழ் இதுவரை வழக்கு பதிவு செய்ய இயலாத நிலை இருந்து வந்தது.

இனிமேல் செம்மரக் கடத்தலில் ஈடுபடுவோர் மீது போலீசார் புதிய சட்டத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்வார்கள். இந்த நீதிமன்றத்தில் விரைவில் செம்மரக் கடத்தல் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வரும். செம்மரக் கடத்தல் தொடர்பாக 2018 வழக்குகள் விசாரணையில் உள்ளன என்று அப்போது கூறினார்.

Views: - 619

0

0