ஐந்து இந்தியர்களை கடத்திய சீனா..! அருணாச்சல் எல்லையிலும் பதற்றம் அதிகரிப்பு..?

5 September 2020, 12:02 pm
India_China_Border_UpdateNews360
Quick Share

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நடந்து வரும் எல்லை தகராறுக்கு மத்தியில், சீன இராணுவம், 5 இந்தியர்களை அருணாச்சல பிரதேசத்திலிருந்து கடத்திச் சென்று, எல்லையில் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் கடந்த மே மாதத்திலிருந்து நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவில் நடக்கும் எஸ்சிஓ கூட்டத்தில் கலந்து கொள்ள ராஜ்நாத் சிங் ரஷ்யாவில் உள்ளார்.

மாஸ்கோவில் உள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று இரவு சீனப் பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்கை சந்தித்தார். இரு நாட்டு அரசியல் தலைவர்களும் நான்கு மாத மோதலுக்கு பிறகு முதல் முறையாக நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

சீன வெளியுறவு அமைச்சகத்தின் வேண்டுகோளின் பேரில் இந்த சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

எனினும், லடாக்கில் நடந்து வரும் எல்லை பதட்டங்களுக்கு சீனா இந்தியாவை குறை கூற முயன்றதால் இரு தலைவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் மீண்டும் பலனளிக்கவில்லை.  

இந்நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ நினோங் எரிங் இது தொடர்பாக வெளியிட்டுள்ள டிவீட்டில், “சீனாவின் பி.எல்.ஏ (மக்கள் விடுதலை இராணுவம்) அருணாச்சல பிரதேசத்தின் மேல் சுபன்சிரியில் உள்ள நாச்சோவில் இருந்து 5 இளைஞர்களை கடத்திச் சென்றுள்ளது.” எனும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும், “ராஜ்நாத் சிங் ரஷ்யா மற்றும் சீனாவின் பாதுகாப்பு அமைச்சர்களை சந்திக்கும் நேரத்தில் இது நடந்துள்ளது. சீன ராணுவத்தின் நடவடிக்கை மிகவும் தவறான செய்தியை அனுப்பியுள்ளது.” எனத் தெரிவித்தார்.

ஒரு பக்கம் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்க முயல்வதாக சீனா கூறி வந்தாலும் மாரு புறம் எல்லையில் தனது அடாவடியை தொடர்ந்து மேற்கொள்வது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே 5 இந்தியர்கள் கடத்தப்பட்டது குறித்து ராணுவம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

Views: - 0

0

0