உத்தரபிரதேசத்தில் ஞாயிறு ஊரடங்கு..! கொரோனாவைக் கட்டுப்படுத்த கடும் கட்டுப்பாடுகளை விதித்த யோகி அரசு..!

16 April 2021, 3:09 pm
UP_Lockdown_UpdateNews360
Quick Share

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு உத்தரபிரதேச அரசு, வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமையன்று மாநிலத்தில் முழுமையான ஊரடங்கை விதிப்பதாக அறிவித்துள்ளது. இருப்பினும், அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் ஊரடங்கு காலத்தில் விலக்கு அளிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு நடைமுறைக்கு வந்து திங்கள் காலை 7 மணி வரை இருக்கும்.

மாநில நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் ஞாயிற்றுக்கிழமை முழுமையான ஊரடங்கு இருக்கும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் மூடப்பட்டு 75 மாவட்டங்களிலும் பெரிய அளவில் சுத்திகரிப்பு திட்டம் மேற்கொள்ளப்படும்.

கொரோனா விதிகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. முககவசம் இல்லாமல் சுற்றித் திரிபவர்களுக்கு ரூ 1,000 அபராதமும், மீண்டும் அதே போல் செய்தால் ரூ 10,000 அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள யோகி ஆதித்யநாத், கொரோனா நோயாளிகளுக்கு அனுமதி மறுக்கும் மருத்துவமனைகளுக்கு எதிராக தொற்றுநோய் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதுபோன்ற மருத்துவமனைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே தினசரி கொரோனா பாதிப்புகள் உத்தரபிரதேசத்தில் அதிகரித்துள்ளது. கொரோனாவின் புதிய பாதிப்புகள் நேற்று லக்னோவில் 5,183, பிரயாகராஜில் 1,888, வாரணாசியில் 1,859, கான்பூரில் 1,263, கோரக்பூரில் 750 எனும் அளவில் உள்ளன.

இதற்கிடையில், மோசமான கொரோனா நிலைமையைக் கருத்தில் கொண்டு லக்னோ உட்பட பத்து மாவட்டங்களில் இரவு ஊரடங்கு உத்தரவுக்கான நேரம் திருத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு இப்போது இரவு 8 மணிக்கு தொடங்கி காலை 7 மணிக்கு முடிவடையும். லக்னோவைத் தவிர, பிரயாகராஜ், வாரணாசி, கான்பூர் நகரம், கவுதம் புத்தா நகர், காசியாபாத், மீரட், கோரக்பூர், ஷ்ராவஸ்தி மற்றும் மொராதாபாத் ஆகிய இடங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

Views: - 22

0

0