நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு நிறைவு : எளிமையாக இருந்தது என மாணவர்கள் மகிழ்ச்சி..!

13 September 2020, 5:33 pm
Quick Share

நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்காக நடைபெற்ற நீட் நுழைவு தேர்வு நிறைவடைந்தது.

இந்தியாவில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் எனப்படும் நுழைவுத்தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கடந்த 2016ஆம் ஆண்டு சில மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 2017 முதல் இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடந்து வருகிறது.

அந்த வகையில், நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் 2020-21ம் கல்வி ஆண்டில் மாணவர்களை சேர்ப்பதற்கான தேசிய அளிவிலான நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் நடைபெறுவதாக இருந்தது. கொரோனா தொற்று காரணமாக நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று நடைபெற்றது. மதியம் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. தேர்வுக்காக மாணவர்கள் காலை 11 மணிக்கு தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

நாடு முழுவதும் 3,842 தேர்வு மையங்களில் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் நீட் தேர்வு எழுதினர். இத்தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடிசா, அசாமி, வங்கம், உருது ஆகிய 11 மொழிகளில் நடைபெற்றது.

தமிழகத்தில் நீட் தேர்வுக்காக திருச்சி, சேலம், சென்னை, திருநெல்வேலி, மதுரை, கோவை உள்ளிட்ட 14 நகரங்களில் 240 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. இவற்றில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 990 மாணவர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர். தேர்வு எழுதி வெளியே வந்த மாணவர்கள் சிலர் தேர்வு எளிமையாக இருந்தது எனவும் கொரோனா ஊரடங்கை படிப்பதற்காக செலவளித்ததால் பிரையோஜனம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

Views: - 0

0

0