சட்டவிரோத சூதாட்டம்..! காங்கிரஸ் உறுப்பினர் உட்பட 41 பேர் கைது..!

8 November 2020, 1:34 pm
Gambling_Cards_UpdateNews360
Quick Share

மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள ஒரு வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக நடந்த சோதனையில், காங்கிரஸ் கட்சி உறுப்பினர் உட்பட நாற்பது பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

ஹனுமந்தல் பகுதியில் வசிக்கும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் கஜேந்திர சோன்கரின் வீட்டில் இருந்து குறைந்தது 17 உரிமம் பெறாத ஆயுதங்கள் மற்றும் 1478 வெடிமருந்துகள், ரூ 7.5 லட்சம் ரொக்கம் மற்றும் மான் கொம்புகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 

இதையடுத்து கஜேந்திரா, அவரது சகோதரர் சோனு சோன்கர், அவர்களது தந்தை ராஜ்குமார் சோன்கர் மற்றும் 38 பேரை மத்தியபிரதேச போலீசார் கைது செய்தனர்.

ஜபல்பூரின் காவல்துறை கண்காணிப்பாளர் சித்தார்த் பகுகுனா, “கஜேந்திர சோன்கருக்கு சொந்தமான வீட்டில் இருந்து நடத்தப்படும் சட்டவிரோத சூதாட்டம் குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்தது. வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது, ​​41 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.” எனத் தெரிவித்தார்.

அவர் மேலும், “சோதனையின்போது, ​​கார்பைன், கைத்துப்பாக்கிகள், துப்பாக்கிகள், நாட்டுத் துப்பாக்கிகள், ரிவால்வர் மற்றும் ஏர் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

சோன்கர் சகோதரர்கள் மீதும் பிற கிரிமினல் வழக்குகள் உள்ளன.

கடந்த மே மாதம், கஜேந்திராவின் மூத்த சகோதரரும், முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலருமான தர்மேந்திர சோன்கர் ஜபல்பூரில் சில குற்றவாளிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். சோன்கர் சகோதரர்கள் வேறு பல குற்ற வழக்குகளையும் எதிர்கொள்கின்றனர். அவர்களின் வருமானத்தின் ஆதாரத்தையும் போலீசார் விசாரிக்கின்றனர்.” என்று சித்தார்த் பகுகுனா மேலும் கூறினார்.

கஜேந்திர சோன்கர் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக உள்ளார்.

இதற்கிடையே ஜபல்பூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தினேஷ் யாதவ், “கஜேந்திர சோன்கர் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக உள்ளார். ஆனால் அவர் கட்சியின் எந்தவொரு நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபடவில்லை” என்றார்.

Views: - 19

0

0