பெண் தலைவரை ஐட்டம் என விமர்சித்த கமல்நாத்..! “காங்கிரசின் வரலாறே இது தான்”..! சாடிய ஜோதிராதித்ய சிந்தியா..!

19 October 2020, 10:06 am
jyotiraditya_scindia_updatenews360
Quick Share

பாஜக பெண் தலைவர் இமார்டி தேவி குறித்து பாலியல் ரீதியான கருத்து தெரிவித்ததற்காக காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான கமல்நாத்திற்கு பாஜக தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா இன்று கண்டனம் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியை விமர்சித்த சிந்தியா, பெண்களை மதிக்காத வரலாறு காங்கிரசுக்கு உள்ளது என்று கூறினார்.

கமல்நாத் மத்திய பிரதேசத்தின் குவாலியரில் ஒரு கூட்டத்தில் இமார்டி தேவியை ஒரு ஐட்டம் என்று அழைத்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவரின் கருத்துக்கள் குறித்து கேட்டபோது, “இது காங்கிரஸின் கொள்கை. முதலில், திக்விஜய் சிங் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி நடராஜனைப் பற்றி இதே போல் ஏதோ சொன்னார். அது எனக்கு முழுமையாக நினைவில் இல்லை. இப்போது கமல்நாத் பாஜகவின் இமார்டி தேவியை ஒரு ஐட்டம் என்று அழைத்தார். அஜய் சிங் அவரை ஜிலேபி என்று அழைத்தார். காங்கிரஸ் ஒருபோதும் பெண்களை மதிக்கவில்லை.” என ஜோதிராதித்ய சிந்தியா கூறினார்.

கமல்நாத்தின் சர்ச்சைக்குரிய கருத்தைத் தொடர்ந்து, இமார்டி தேவி அவரை விளாசியதோடு, அவரை கட்சியில் இருந்து நீக்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இமார்டி தேவி மேலும், சோனியா காந்தியின் சொந்த மகள் பற்றி கூறியிருந்தால் அதை அவர் பொறுத்துக்கொள்வாரா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையே கந்த்வாவில் நேற்று முன்னதாக ஜோதிராதித்யா சிந்தியாவின் தேர்தல் பேரணியின் போது, ஒரு விவசாயி மாரடைப்பு காரணமாக இறந்தார். பொதுமக்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்த விவசாயியின் மறைவு பற்றிய தகவலைப் பெற்றதும், இறந்தவருக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என்று பேரணியில் கலந்து கொண்ட அனைவரையும் சிந்தியா கேட்டுக்கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸால் குறிவைக்கப்பட்ட பின்னர், மாநிலங்களவை எம்.பி. சிந்தியா இந்த விவகாரத்தில் கூட அரசியல் செய்யும் காங்கிரசை மேலும் விளாசினார். மேலும் காங்கிரசிலிருந்து பொது சேவை என்ற சான்றிதழ் எதுவும் தேவையில்லை என்று கூறினார்.

“வழக்கம்போல, முக்கியமான விஷயங்களில் கூட காங்கிரஸ் மலிவான அரசியலைச் செய்து வருகிறது. நான் பேரணியில் வருவதற்கு முன்பே, எங்கள் அன்னதாதா (விவசாயி) காலமானார். அவர் உடனடியாக கட்சியினரால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.” என்று சிந்தியா ஒரு ட்வீட் மூலம் தெரிவித்தார்.

“பேரணியை அடைந்த பின்னர் இந்த துயரமான சம்பவம் பற்றி நான் அறிந்தபோது, அன்னதாதாவுக்கு அஞ்சலி செலுத்த மௌனம் காக்குமாறு மக்களிடம் கேட்டேன். அரசியல் எனக்கு பொது சேவைக்கான ஊடகம். இதற்காக காங்கிரஸிடமிருந்து ஒரு சான்றிதழை நான் விரும்பவில்லை” என அவர் மேலும் கூறினார்.

Views: - 14

0

0