ராகுல்காந்தி ஆதரவாளர்களுக்கு முக்கிய பதவி : காங்கிரசில் குடும்ப ஆதிக்கத்தை வலுப்படுத்தினார் சோனியா!!

12 September 2020, 7:52 pm
Quick Share

சென்னை: காங்கிரசில் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் தலைமைப் பதவிக்கு வரமாட்டார்கள் என்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும், அவரது தங்கை பிரியங்கா காந்தியும் கூறிவரும் நிலையில், கட்சிப்பதவிகளுக்குத் தேர்தல் நடத்த வேண்டும் என்று வெளிப்படையாகக் கருத்து தெரிவித்த மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்படும் நடவடிக்கைகளை கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி எடுத்துள்ளார்.

சோனியா தலைமையிலும், ராகுல்காந்தி தலைமையிலும் காங்கிரஸ் தொடர்ந்து இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் படுதோல்வி அடைந்து, எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூடப் பெற முடியாத நிலையில் உள்ளது. அது குடும்பக்கட்சி என்று பாஜக செய்த பிரச்சாரமே தோல்விக்கு முக்கிய காரணமாகச் சொல்லப்பட்டது. தோல்விக்குப் பிறகு ராகுல்காந்தி தலைமைப் பதவியில் இருந்து விலகினார்.

தமது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கட்சியில் தலைமைப்பதவிக்கு வரமாட்டார்கள் என்றும், வெளியில் இருந்தும் கட்சியைக் கட்டுப்படுத்தமாட்டோம் என்றும் கூறினார். ஆனால், தேர்தலில் படுதோல்வியை சந்தித்ததால் சோனியா குடும்பம் நடத்தும் நாடகம் என்றும், தோல்விக்கு ராகுல்காந்தியைப் பொறுப்பாக்காமல் அதேவேளையில் கட்சியின் கட்டுப்பாட்டை குடும்பத்தின் கையில் வைத்திருக்கும் உத்தி என்றும் எதிர்க்கட்சிகளால் கூறப்பட்டது.

sonia_gandhi_rahul_gandhi_updatenews360

இந்த சூழலில் காங்கிரசுக்கு நிரந்தர தலைவர் நியமிக்கப்பட வேண்டும் என்றும், கட்சியின் காரிய கமிட்டியில் மாற்றம் கொண்டு வர வேண்டும்’ எனக்கோரி, கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாவுக்கு, கட்சியின் பொதுச் செயலராக இருந்த குலாம் நபி ஆசாத் உட்பட, 23 தலைவர்கள் கடிதம் எழுதினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, காங்கிரசின் முக்கியத் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், கடிதம் எழுதியவர்களுக்கு சோனியா காந்திக்கு நெருக்கமானவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அந்தக் கடிதம் தலைமைக்கு எதிரானது அல்ல என்று மூத்த தலைவர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பேசிய சோனியாகாந்தி கடிதம் எழுதிய தலைவர்களைத் தான் மன்னித்துவிட்டாதாகவும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது என்றும் கூறினார்.

ஆனால், கடிதம் எழுதிய தலைவர்களில் முக்கிய தலைவரான குலாம் நபி ஆசாத்தின் பொதுச்செயலாளர் பதவி தற்போது பறிக்கப்பட்டுள்ளது. பதவியை விரும்பாதவர்கள் என்று கூறப்படும் சோனியா குடும்பத்தில் அவரும், மகன் ராகுல்காந்தியும், மகள் பிரியங்கா காந்தியும் காங்கிரசின் உயர் அதிகார அமைப்பான காரியக் கமிட்டியில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

மூத்த தலைவர்களான மோதிலால் வோரா, அம்பிகா சோனி, மல்லிகார்ஜூன் கார்கே ஆகியோர் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். பொதுக்குழுவில் சோனியா குடும்பத்துக்கு விசுவாசமானவர்களும், ராகுல்காந்திக்கு நெருக்கமானவர்களும் காரியக் கமிட்டியிலும் தேர்தல் பணிக்குழுவிலும் பிற பொறுப்புகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். கடிதம் எழுதிய தலைவர்களில் சிலருக்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது அவர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி என்று கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் காரியக் கமிட்டி உறுப்பினராக்கப்பட்டுள்ளார்.

Congress meeting - updatenews360

ராகுல்காந்திக்கு நெருக்கமான மாணிக் தாகூர், ஜோதிமணி ஆகியோருக்கு முக்கிய பொறுப்புகள் தரப்பட்டுள்ளன. காங்கிரஸ் பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள சுர்ஜ்வாலா, கே.சி, வேணுகோபால், அஜய் மேக்கன், ஜிதேந்திர சிங் ஆகியோரும் ராகுல்காந்திக்கு நெருக்கமானவர்களாகவே இருக்கின்றனர்.

உத்திரப்பிரதேசத்தில் கட்சியின் பொறுப்பாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். அதே மாநிலத்தில் இருந்து ராகுல்காந்திக்கு நெருக்கமான ஜிதின் பிரசாதா காரியக் கமிட்டிக்கு அழைப்பாளராக நியமனம் பெற்றுள்ளார். தமிழகப்பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ் நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் காரிய கமிட்டியின் உறுப்பினராக, குலாம் நபி ஆசாத் நீட்டிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் காரிய கமிட்டியின் உறுப்பினர்களாக, சிதம்பரம், ஜிதேந்திர சிங், தாரிக் அன்வர், ரந்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் மீண்டும் நியமிக்கப்பட்டுஉள்ளனர்.

தமிழகத்திற்கான பொறுப்பாளராக இருந்த முகுல் வாஸ்னிக், மத்திய பிரதேச மாநில பொறுப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பாளராக, தமிழக எம்.பி., மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். ஒடிசா மாநில பொறுப்பாளராக, தமிழக எம்.பி., செல்லகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.

Views: - 7

0

0