மம்தா தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலா..? ஸ்டாலினின் நூல் வெளியீட்டு விழாவில் திமுக போட்ட சரவெடி… அதிர்ந்து போன ராகுல்!!

Author: Babu Lakshmanan
1 March 2022, 5:31 pm
Quick Share

‘உங்களில் ஒருவன்’ நூல்

திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ முதல் பாகம் நூல் வெளியீட்டு விழா தேசிய அளவில் பல்வேறு யூகங்களை கிளப்பி விட்டிருக்கிறது.

சென்னையில் நடந்த இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சியான லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் தேஜஸ்வி யாதவ் ஆகிய 4 தலைவர்கள் பங்கேற்றனர்.

மம்தா புறக்கணிப்பு

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, உபி சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ்
ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக ஒரு வாரத்துக்கு முன்பு தகவல் வெளியாகி இருந்ததால் அவர்களும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Mamata_Banerjee_UpdateNews360

மம்தாவும், சந்திரசேகர ராவும் தனிப்பட்ட முறையில் பாஜகவுக்கு எதிராக தனி அணியை 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக உருவாக்கும் நோக்கத்துடன் தீவிரமாக செயல்பட்டு வருவதால் இந்த எதிர்பார்ப்பு மிகப் பெரிதாக இருந்ததும் நிஜம்.

ஆனால் திமுக தரப்பில் முதலமைச்சர் ஸ்டாலினின் நூல் வெளியீட்டு விழா தொடர்பாக
ஊடகங்களில் கொடுக்கப்பட்ட விளம்பரத்தில் ராகுல், பினராயி விஜயன், உமர் அப்துல்லா, தேஜஸ்வி யாதவ் கலந்து கொள்கிறார்கள் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் மற்ற தலைவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வது குறித்து எவ்வித உறுதிமொழியையும் வெளிப்படையாக திமுகவுக்கு தரவில்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அதேநேரம் இந்த தலைவர்கள் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து இருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

திராவிட மாடல்

நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் “மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்க அரசியல் சட்டத்தை திருத்தவேண்டும், இந்தியா முழுவதற்கும் திராவிட மாடல் கோட்பாட்டை விதைப்பதை எனது பணியாக மேற்கொள்வேன்” என்று குறிப்பிட்டார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 2024 தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பது எப்படி என்பது எங்களுக்குத் தெரியும் என்று பரபரப்பு காட்டினார்.

டிஆர் பாலு சரவெடி

முன்னிலை வகித்து பேசிய திமுக பொருளாளர் டி ஆர் பாலு எம்பியின் பேச்சுதான் இதில் சரவெடியாக இருந்தது. அவர் கூறும்போது, “303 இடங்களில் பாஜகவினர் வெற்றி பெற்றுள்ளனர். அவங்களை யார் அடக்குவது? 303 பேர் இருக்காங்க.. அவர்களை வெற்றி பெற செய்தது யார்? இத்தனைக்கும் அவர்கள் பெற்ற வாக்கு வெறும் 37 சதவீதம் மட்டுமே.

இன்று இந்த மேடையில் தேசிய தலைவர்கள் அனைவரும் ஒன்று கூடியிருக்கிறார்கள். இந்த நிலை மென் மேலும் தொடர வேண்டும்.

1996, 2004-ம் ஆண்டுபோல மேலும் சில கட்சிகளை இணைத்துக் கொண்டு, ஒற்றுமையாக போராடினால் தான் மதவாதத்தை ஒடுக்க முடியும். நேரில் பார்க்கும்போது ஒருவரையொருவர் கட்டி தழுவிக் கொள்கிறோம். வேற்றுமைகளை மறந்து ஒன்றுகூடுகிறோம். ஆனால், தேர்தல் என்று வந்தால் நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்துவிட்டது போல் தனித்தனித்தனியாக பிரிந்து போய்விடுகிறோம்.

இனிமேலாவது நாம் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து மதத்தை வைத்து ஆட்டம் போடும் பாஜகவுக்கு முடிவு கட்ட வேண்டும். தமிழகத்தில் தலைவர்கள் இன்று கூடியது போல கூட வேண்டும். மாநில சுயாட்சி, மதச்சார்பின்மை என்பதுதான் திராவிட மாடல் அரசியல்.

யார் தலைமையில் வேண்டுமானாலும் எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்று கூடட்டும்.
ஆனால், தேர்தல் காலத்தில் தனித்தனியாக நிற்பதால் வாக்குகள் சிதறுகிறது. இதனால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக இருக்க வேண்டியது அவசியம்” என்று தேசிய எதிர்க்கட்சித் தலைவர்களை உசுப்பேற்றினார்.

காங்கிரஸ் அதிர்ச்சி

“டிஆர் பாலு இப்படி தடாலடியாக கூறியிருப்பது மம்தா பானர்ஜி, சந்திரசேகர் ராவ், அகிலேஷ் யாதவ் ஆகியோரை மனதில் வைத்துத்தான். இது காங்கிரசுக்கும் அதிர்ச்சி அளிக்கும் விஷயம். ஏனென்றால் ராகுல் முன்னிலையிலேயே அவர் இப்படி பேசியிருக்கிறார்” என்று டெல்லியில் மூத்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

“தேசிய அளவில் 15க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு திமுக தரப்பில் ஸ்டாலினின் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் 4 தலைவர்கள் மட்டுமே கலந்துகொண்டு இருக்கிறார்கள். உத்தரபிரதேசத்தில் சட்டப் பேரவை தேர்தல் நடப்பதால் சமாஜ்வாடி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் இந்த விழாவிற்கு வரவில்லை.

Akilesh_UpdateNews360

ஒருவேளை தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு, புத்தக வெளியீட்டு விழா நடத்தப்பட்டு இருந்தால் கிடைக்கும் வெற்றி, தோல்விக்கு ஏற்ப அவர் இது பற்றி முடிவெடுத்திருக்க வாய்ப்பு உண்டு.

அவருடைய மாநிலத்தில் 80 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. அதனால் சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாடி வெற்றி பெற்றால் தனது கட்சிக்குத்தான் தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முதல் தகுதி கிடைக்கும் என்று கருதி அகிலேஷ் யாதவ் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமலும் போய் இருக்கலாம்.

தவிர நாடு முழுவதும் செல்வாக்கு பரவலாக சரிந்து போயுள்ள காங்கிரஸுடன் சேர்ந்து போட்டியிட அவர் விருப்பமும் கொண்டதுபோலவும் தெரியவில்லை. ஏனென்றால் காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள் அணிக்கு தலைமை தாங்க விரும்பும் மம்தா, உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடிக்கு ஆதரவாக அண்மையில் பிரச்சாரம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mamata_Banerjee_UpdateNews360

அதேநேரம் பீகாரில் காங்கிரசை தனது கூட்டணியிலிருந்து கழற்றி விட முடிவு செய்துள்ள ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் இந்த நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றது ஆச்சரியமளிக்கும் விஷயம்.

தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் திட்டத்தில் திமுக இப்போதுதான் முதல் படி ஏறி இருக்கிறது. இந்த விஷயத்தில் 18 எதிர்க் கட்சிகளையும் ஒருமித்த கருத்துக்கு கொண்டுவருவது லேசான விஷயம் அல்ல. இன்னும் பல கடினமான படிகள் உள்ளன. அதைத்தான் டிஆர் பாலு யார் தலைமையில் வேண்டுமானாலும் எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்று கூடட்டும் என்று கூறியிருக்கிறார்.

யார் தலைமை..?

இதை இரண்டு விதமாக அர்த்தம் கொள்ளலாம். ஸ்டாலின் தலைமையில் திமுகவே அந்த முயற்சியில் இறங்கும் என்பது ஒன்று. அல்லது காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு ஆதரவு தருவோம் என்பது இன்னொன்று.

ஆனால் நீட்தேர்வு, சமூகநீதி அமைப்பு போன்ற விஷயங்களில் பெரும்பாலான வட மாநில எதிர்க்கட்சிகள் திமுகவுக்கு ஆதரவு அளித்ததாக தெரியவில்லை. அதனால் ஸ்டாலினை பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் களமிறக்க எதிர்க்கட்சிகள் தயங்கலாம்.

இதனால்தான் தமிழகத்தில் மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்களை கிராமங்கள்தோறும் தீவிர பிரசாரம் மேற்கொள்ள வேண்டுமென்று தமிழக பாஜக வியூகம் வகுத்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில்
திமுகவும் அதன் கூட்டணியில் உள்ள 12 கட்சிகளும் பிரதமர் மோடி மீது கட்டமைத்துள்ள போலியான பிம்பத்தை தகர்த்தெறிந்து 2024 தேர்தலில் மட்டும் 10 தொகுதிகளுக்கும் குறையாமல் வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்புடன் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை செயல்பட்டு வருகிறார். அதற்கான முழு ஆதரவை பாஜக மேலிடம் அவருக்கு அளித்தும் வருகிறது.

உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகே மோடிக்கு எதிராக யாரை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது என்ற முடிவுக்கு எதிர்க்கட்சிகள் வரும்.

அதற்குப்பிறகும் கூட எதிர்க்கட்சிகளின் முயற்சி கைகூடவில்லை என்றால் மூன்றாவது முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளே அதிகம்” என்று அந்த மூத்த அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டனர்.

Views: - 1004

0

0