நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..! பிரஷாந்த் பூஷன் விளக்கம் நிராகரிப்பு..! சாட்டையை சுழற்றும் உச்ச நீதிமன்றம்..!

10 August 2020, 12:57 pm
Supreme_Court_UpdateNews360
Quick Share

உச்சநீதிமன்றத்தின் கடந்த 16 தலைமை நீதிபதிகளில் பாதிப்பேர் ஊழல் நிறைந்தவர்கள் என்று 2009’ல் தெஹல்கா பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் போது பிரஷாந்த் பூஷன் கூறிய விவகாரத்தில், அவரின் விளக்கத்தை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச், அவருக்கு எதிராகத் தொடங்கப்பட்ட அவமதிப்பு வழக்கைத் தொடரவும், இந்த விஷயம் குறித்து விரிவாகக் கேட்டபின் முடிவெடுக்கவும் முடிவு செய்வதாக அறிவித்துள்ளது.

நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச், பிரஷாந்த் பூஷன் மன்னிப்பு கேட்டால் இந்த வழக்கை பூஷன் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். மாறாக வருத்தத்தை வெளிப்படுத்தும் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

அவருடைய அறிக்கை நீதிபதிகள் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களை புண்படுத்தியிருந்தால் மற்றும் அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு நீதித்துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்திருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக தனது அறிக்கையில் கூறியிருந்தார்.

பூஷன் தனது அறிக்கையில் ஊழல் என்ற வார்த்தையை பரந்த பொருளில் பயன்படுத்தியிருப்பதாகக் கூறினார். “நான் நிதி ஊழல் அல்லது எந்தவொரு பணப் பலன் குறித்தும் பேசவில்லை. நான் கூறியது அவர்களில் எவருக்கும் அல்லது அவர்களது குடும்பத்தினருக்கும் எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தால், நான் வருத்தப்படுகிறேன். நீதித்துறை குறிப்பாக உச்சநீதிமன்ற செயல்பாடுகளை நான் ஆதரிக்கிறேன்.” என்று அவர் கூறினார்.

இதற்கிடையே பூஷனுக்கு எதிரான மற்றொரு நடவடிக்கை ஏற்கனவே இரண்டு சர்ச்சைக்குரிய ட்வீட்டுகள் மூலம் தற்போதைய மற்றும் முன்னாள் தலைமை நீதிபதிகளுக்கு எதிரான பூஷனின் அவமதிப்பு கருத்துக்களுக்காக அதே பெஞ்ச் முன் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹார்ட்லி டேவிட்சன் பைக்கில் தலைமை நீதிபதி அமர்ந்திருந்த ஜூன் 29 தேதியிட்ட புகைப்படத்தைப் பற்றி பிரசாந்த் பூஷண் வெளியிட்ட ட்வீட்டில், “தலைமை நீதிபதியால் நாக்பூரில் ஒரு பாஜக தலைவருக்குச் சொந்தமான 50 லட்சம் மோட்டார் சைக்கிளை முககவசம் அல்லது ஹெல்மெட் இல்லாமல் சவாரி செய்ய முடிகிறது. ஆனால் ஊரடங்கு நடவடிக்கையால் குடிமக்களுக்கு நீதியை அணுகுவதற்கான அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறது!” என ட்வீட் செய்திருந்தார்.

மேலும் பூஷண் சமீபத்தில் வெளியிட்ட மற்றொரு ட்வீட்டில், “எதிர்காலத்தில் வரலாற்றாசிரியர்கள் கடந்த ஆறு ஆண்டுகளில் திரும்பிப் பார்க்கும்போது, ஒரு முறையான அவசரநிலை கூட இல்லாமல் இந்தியாவில் ஜனநாயகம் எவ்வாறு அழிக்கப்பட்டுவிட்டது என்பதைப் பார்க்கும்போது, அவர்கள் குறிப்பாக இந்த அழிவில் உச்சநீதிமன்றத்தின் பங்கை பேசுவார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் ஆகஸ்ட் 4’ம் தேதி, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர்.கவாய் மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், அவரது விளக்கத்தை ஏற்றுக் கொள்ளலாமா என்பது குறித்த உத்தரவுகளை ஒத்தி வைத்ததுடன், அவரது விளக்கம் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் வழக்கை விரிவாக விசாரிப்போம் என்றும் கூறியுள்ளது.