‘அண்ணாத்த’ படப்பிடிப்பு திடீரென நிறுத்தம்: படக்குழுவினர் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!

23 December 2020, 3:11 pm
annatha - updatenews360
Quick Share

ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பங்கேற்ற 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் நயன்தாரா, மீனா, குஷ்பு, சூரி உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே இணைந்திருக்கிறது.

ரஜினிகாந்தின் தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடிக்கிறார்.ஆரண்ய காண்டம், பிகில் படங்களில் நடித்த பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப்பும், ஜெயம் படத்தில் வில்லனாக மிரட்டிய டோலிவுட் நடிகர் கோபிசந்தும் அண்ணாத்த படத்தின் வில்லன்களாக நடிக்கிறார்கள்.

கொரோனா ஊரடங்கு கெடுபிடிகளால், 10 மாதங்களாக தடைப்பட்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு, டிசம்பர் 14ம் தேதி தொடங்கியது. இதில் கலந்து கொள்வதற்காக தனி விமானம் மூலம், நடிகர் ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யா மற்றும் நயன்தாரா ஆகியோர் ஐதராபாத் கிளம்பினர். அதே விமானத்தில் கேக் வெட்டி, தனது பிறந்த நாளையும் ரஜினிகாந்த் கொண்டாடினார். படப்பிடிப்பு தளத்தில் ரஜினியுடன் எப்போதும் உடனிருக்கும் மகள் ஐஸ்வர்யா, அவருக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுப்பதாக சொல்கிறார்கள். கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால், ரஜினியை யாரும் நெருங்காத வண்ணம் அவர் கவனித்துக் கொள்கிறாராம்.

இந்நிலையில், அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட படக்குழுவினர் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதால் நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்தை விட்டு வெளியேறினார் என கூறப்படுகிறது.

மேலும், ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கொரோனா நெகடிவ் என வந்துள்ளதாகவும், இருப்பினும் தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 1

0

0