கொரோனாவுக்கு அஞ்சாமல் கும்பமேளாவில் குவிந்த பக்தர்கள்: 1000 பேருக்கு தொற்று உறுதி..!!

15 April 2021, 9:57 am
Quick Share

ஹரித்வார்: கடந்த 2 நாட்களில் மகா கும்பமேளாவில் பங்கேற்ற சுமார் ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட இந்தியாவில், இமய மலை அடிவாரத்தில் இருக்கும் உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் நகரத்தில் கும்பமேளா திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. இத்திருவிழாவில் புனித நீராட மக்கள் லட்சக் கணக்கில் குவிந்துள்ளனர்.

மக்கள் கூட்டம் மிக அதிகமாக இருப்பதால் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை அமல்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறி வந்தனர். அகாடா என்ற சாமியார்கள் அமைப்பை சேர்ந்த மடாதிபதிகள் புனித நீராடுவதற்காக, ஹர் கி பைரி என்ற படித்துறை ஒதுக்கப்பட்டு இருந்தது. பல்லக்கில் எடுத்து வரப்பட்ட சாமி சிலைகளுடன் அவர்கள் புனித நீராடினர்.

நாகா சாதுக்கள் ஏராளமானோர் பெரும் ஊர்வலமாக வந்து புனித நீராடினர். லட்சக்கணக்கான சாதாரண பக்தர்கள், வேறு படித்துறைகளில் புனித நீராடினர். நேற்று மதியத்துக்குள் 8 லட்சம் முதல் 10 லட்சம் பக்தர்கள் வரை புனித நீராடியதாக கும்ப மேளா ஏற்பாடுகளை மேற்பார்வையிட்ட போலீஸ் டி.ஜி.பி. அசோக் குமார் தெரிவித்தார்.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, எதிர்பார்த்ததை விட குறைவான கூட்டம்தான் வந்துள்ளதாக அவர் கூறினார். புனித நீராட வந்த பக்தர்களுக்கு போலீசார் முக கவசங்களை வினியோகித்தனர். ஆனால், புனித நீராடும்போது பெரும்பாலானோர் முக கவசம் அணியவில்லை.

சமூக இடைவெளியையும் பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது. கொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு கும்பலாக நடமாடினர். இந்நிலையில், கடந்த 2 நாட்களில் கும்பமேளாவில் பங்கேற்ற சுமார் 1000 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கும்பமேளா நடைபெறும் பகுதியில் மட்டும் நாளொன்றுக்கு 50 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

Views: - 47

0

0