நாடு முழுவதும் தொடங்கியது டிக்கா உத்சவ் தடுப்பூசி திருவிழா: ஆர்வம் காட்டும் பொதுமக்கள்..!!

12 April 2021, 9:37 am
utsav vaacine - updatenews360
Quick Share

டெல்லி: நாடு முழுவதும் நேற்று தொடங்கிய டிக்கா உத்சவ் தடுப்பூசி திருவிழாவில், ஒரே நாளில் 27 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துவரும் நிலையில்,மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி 4 நாள் டிக்கா உத்சவ் எனப்படும் கொரோனா தடுப்பூசி திருவிழா நடத்தப்படும் என அறிவித்தார். 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், தகுதி வாய்ந்தவர்கள் அனைவருக்கும் மிக விரைவில் தடுப்பூசி செலுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

இந்தநிலையில், நாடு முழுவதும் 4 நாள் கொரோனா தடுப்பூசி திருவிழா நேற்று தொடங்கியது. அதன்படி தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் நேற்று முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெறுகிறது. டிக்கா உத்சவ் எனப்படும் இந்தத் தடுப்பூசி திருவிழாவில் முதல் நாளான நேற்று மட்டும் நாட்டில் புதிதாக 27 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை 10 கோடியே 43 லட்சத்து 65 ஆயிரத்து 35 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நேற்று நாட்டில் 6.38 லட்சம் தடுப்பூசி மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக டெல்லி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தடுப்பூசி மையங்கள் இரண்டு மடங்கு அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த தடுப்பூசி திருவிழாவில் பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் வழக்கத்தைவிட அதிகப்படியான மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்குப் பற்றாக்குறை நிலவுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 25

0

0