பீகார் தேர்தல் முடிவு நிலவரம்: தேசிய ஜனநாயக கூட்டணி- மெகா கூட்டணி இடையே கடும் போட்டி…!!

10 November 2020, 9:05 am
bihar-vote-count-updatenews360
Quick Share

பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. முன்னிலை விவரங்களில் என்டிஏ- ஆர்ஜேடி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜனதா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்த மெகா கூட்டணியும் பிரதானமாக களத்தில் உள்ளன.

இவைகள் தவிர, ராஷ்டிரீய லோக் சமதா கட்சி தலைமையில் மற்றொரு அணியும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்த ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி தனியாகவும் போட்டியிட்டன. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.

தபால் வாக்குகள் எண்ணும் பணி முதலில் தொடங்கியது. 38 மாவட்டங்களில் 55 இடங்களில் அமைந்துள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி 130 இடங்களில் முன்னிலையிலும், காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கும் மெகா கூட்டணி 96 இடங்களிலும் உள்ளது. ஆரம்பகட்ட சுற்று விவரங்களின் படி, தேசிய ஜனநாயக கூட்டணி- மெகா கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

Views: - 38

0

0