மத்திய பிரதேசத்தில் இடைத்தேர்தல் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது….!!

10 November 2020, 9:44 am
bopal elec - updatenews360
Quick Share

போபால்: மத்திய பிரதேசத்தில் 28 சட்டசபை தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

230 சட்டசபை தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக கட்சியின் முக்கிய தலைவரான ஜோதிர் ஆதித்யா சிந்தியா போர்க்கொடி தூக்கினார். ஜோதிர் ஆதித்யா சிந்தியாவுக்கு ஆதரவாக 22 எம்.எல்.ஏ.க்களும் தங்கள் பதவியில் இருந்து விலகினர்.

இதனையடுத்து, ஜோதிர் ஆதித்யா சிந்தியா தனது ஆதரவாளர்களுடன் பா.ஜ.க.வில் இணைந்தார். அவர்களை தொடர்ந்து மேலும் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர். இதன் காரணமாக மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு கவிழ்ந்து சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. அரசு ஆட்சியை கைப்பற்றியது.

இதனை தொடர்ந்து ஏற்கனவே காலியாக இருந்த 3 இடங்களைச் சேர்த்து மொத்தம் 28 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த நவம்பர் 3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை மீட்க காங்கிரசும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். மத்திய பிரதேசத்தில் தற்போது பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் பலம் 107 ஆக உள்ளது. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பா.ஜ.க. இன்னும் 9 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டியதுள்ளது.

இதேபோல், 88 எம்.எல்.ஏ.க்களை தங்கள் கைவசம் வைத்துள்ள காங்கிரஸ் இழந்த ஆட்சியை மீண்டும் பெற போட்டியிடும் 28 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் அல்லது குறைந்தது 21 தொகுதிகளில் வெற்றிபெற்று பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்று ஆட்சியமைக்கலாம். இந்நிலையில், மத்திய பிரதேசம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியுள்ளது.

Views: - 21

0

0