மொத்தம் 4,442 எம்.பி, எம்.எல்,ஏக்கள் மீது கிரிமினல் வழக்கா..? அதிர்ச்சி தரும் புள்ளி விவரம்..!

9 September 2020, 4:21 pm
Quick Share

தற்போது உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீது 2,556 கிரிமினல் வழக்குகள் உள்ளதாக உச்சநீதிமன்றம் நியமித்த குழு தனது அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

நாடு முழுவதும் தேர்தலில் போட்டியிடும் குற்றவாளிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த உச்சநீதிமன்றமும், இந்திய தேர்தல் ஆணையமும் பல்வேறு விதிமுறைகளையும், உத்தரவுகளையும் பிறப்பித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி மாநிலங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், முன்னாள், இந்நாள் எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீது உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீது உள்ள குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை வழங்க வேண்டும் என மாநில உயர்நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டது. இந்த விவரங்களை சேகரித்து தர வழக்கறிஞர்கள் இருவரையும் உச்சநீதிமன்றம் நியமித்தது.

அவர்கள் தற்போது தங்கள் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். அதில், நாடு முழுவதும் மொத்தமாக சுமார் 4,442 கிரிமினல் வழக்குகள் இந்நாள் மற்றும் முன்னாள் எம்பி, எம்எல்ஏக்களின் மீது பதியப்பட்டு நிலுவையில் உள்ளன. அதில் 2,556 கிரிமினல் வழக்குகளை இந்நாள் எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

உத்தரபிரதேசம், பீகார், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த இந்நாள் மற்றும் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் மீது குற்ற வழக்குகள் ஆயுள் தண்டனை பெருமளவிற்கு அதிகம் உள்ளன. நாட்டிலேயே உத்தரபிரதேசம் (446), கேரளா (310)வை சேர்ந்த இந்நாள் மற்றும் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் தான் அதிகளவில் வழக்கை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளை விரைந்து முடிக்க பிரத்யேக நீதிபதிகள் கொண்ட அமர்வை அமைக்க உச்சநீதிமன்றம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து வழக்கறிஞர் ஹன்சாரியா கூறுகையில், ‘குற்றவழக்கில் தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றங்கள் உட்பட பல்வேறு நீதிமன்றங்களில் மொத்தம் 4,442 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அதில், சிட்டிங் எம்பி, எம்எல்ஏக்கள் மீது 2,556 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சுமார் 413 வழக்குகள், ஆயுள் தண்டனை பெருமளவிற்கு குற்றவாளிகள் குற்றம் செய்துள்ளனர். அவற்றில் 174 வழக்குகள் சிட்டிங் எம்பி, எம்எல்ஏக்கள் மீதானவை’ என்றார்.

Views: - 0

0

0