கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவிக்கு கொடுமை : மனைவி மற்றும் மகளை வீட்டுக்குள் அடைத்து சுவர் கட்டிய பிரபல தொழிலதிபர்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 May 2022, 1:45 pm
Business Man Arrest -Updatenews360
Quick Share

ஆந்திரா : கூடுதல் வரதட்சணை கேட்டு சுவர் எழுப்பி மனைவி மகள் ஆகியோரை வீட்டு சிறையில் வைத்த தொழில் அதிபரை போலீசார் கைது செய்தனர்.

ஹைதராபாத் செல்பவர்கள் அங்கு உள்ள சார்மினாரை பார்வையிட்டு மிகவும் பிரபலமான ஹைதராபாத் பிரியாணியை சாப்பிட்டு தாங்கள் வந்த வேலையையும் பார்த்து கொண்டு ஊர் திரும்புவது வழக்கம்.

ஆனால் ஹைதராபாத்தில் இன்னொரு விஷயம் மிகவும் பிரபலம். அதுதான் புல்லா ரெட்டி ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்னாக்ஸ் கடை.

ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து ஹைதராபாத் செல்பவர்கள் சார்மினாரை பார்வையிட்டு ஹைதராபாத் பிரியாணி சாப்பிட்டு பின்னர் புல்லா ரெட்டி இனிப்பு கடைக்கு சென்று வீட்டுக்கு தேவையான இனிப்பு வகைகளையும் வாங்கி செல்வார்கள்.

அந்த அளவிற்கு அந்த கடை ஹைதராபாத்தில் மிகவும் பிரபலம். நகரில் பல கிளைகளை கொண்டுள்ள அந்த கடையின் உரிமையாளர் புல்லா ரெட்டி. அவருடைய பேரன் ஏக்நாத்.

ஏக் நாத் கடந்த 2014ஆம் ஆண்டு பிராஞ்னயா என்பவரை திருமணம் செய்தார். திருமணத்தின் போது பெண் வீட்டார் 75 லட்ச ரூபாய் ரொக்கம், 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், 35 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைர நெக்லஸ் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள், பணம் ஆகியவற்றை வரதட்சணையாக வழங்கினர்.

அவர்களுக்கு ஏழு வயதில் மகள் ஒருவர் இருக்கிறார். ஹைதராபாதில் உள்ள வீட்டில் ஏக்நாத் தன்னுடைய சகோதரர்கள் மற்றும் தந்தை ஆகியோருடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஓராண்டாக கூடுதல் வரதட்சணை கேட்டு கணவன் வீட்டார் பிராஞ்னயாவுக்கு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

ஹைதராபாத்தில் உள்ள வீடு ஒன்றை வரதட்சணையாக வாங்கி வரும்படி அவர்கள் பிராஞ்னயாவை வற்புறுத்தி வந்துள்ளனர். பிராஞ்னயா கூடுதல் வரதட்சணை வாங்கி வர மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி இரவு பிராஞ்னயா அவருடைய 7 வயது மகள் ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்த அறையின் முன் திடீரென்று சுவர் எழுப்பிய கணவன் வீட்டார் அவர் வெளியில் வர இயலாமல் தடுத்துவிட்டனர்.

மேலும் வீட்டு வேலை செய்யும் நபர்களிடம் பிராஞ்னயாவுக்கு சாப்பாடு, குடிநீர் வழங்குவது ஆகியவை உள்ளிட்ட எந்த உதவியும் செய்யக் கூடாது என்று கூறி தடுத்து விட்டனர்.

இதுபற்றி பிராஞ்னயா தன்னுடைய தந்தைக்கு தகவல் அளித்தார். தொடர்ந்து பிராஞ்னயா அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் வீட்டு சிறையில் சிக்கி இருந்த பிராஞ்னயா அவருடைய 7 வயது மகள் ஆகியோரை மீட்டனர்.

பின்னர் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா காவல்நிலையத்தில் புகார் அளித்த பிராஞ்னயா தன்னுடைய திருமணத்தின் போது லட்சக்கணக்கான ரூபாய் அளவில் வரதட்சணை கொடுத்தது முதல் அனைத்தையும் புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும் கூடுதல் வரதட்சணை கேட்டு மிரட்டும் என்னுடைய மாமனார், மைத்துனர், கணவர் ஆகியோர் என்னையும் என் மகளையும் கொலை செய்ய திட்டம் போட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் என்னுடைய கணவருக்கு ரத்தப் புற்றுநோய் இருப்பதை மறைத்து எனக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார்கள் என்றும் கணவன் வீட்டார் மேல் குற்றம் சுமத்தியிருக்கிறார்.

குடும்ப வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள பஞ்சகுட்டா போலீசார் ஏக்நாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 608

0

0