பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் தேதி..? மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்
11 August 2020, 1:04 pmடெல்லி: இந்தாண்டு இறுதி வரை கல்வி நிறுவனங்கள் திறக்கப்படாது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவிக் கொண்டு இருக்கிறது. ஊரடங்கு நடைமுறையில் இருந்தாலும் கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை.
பொதுமக்கள், மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என அனைத்து தரப்பினரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஊரடங்கு இம்மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் கல்வி நிலையங்கள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் வழியில் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
தொடரும் கொரோனா பாதிப்பால் எப்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்பது தெரியவில்லை. இந் நிலையில் வரும் டிசம்பர் இறுதி வரை கல்வி நிறுவனங்கள் திறக்க வாய்ப்பு இல்லை என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் மத்திய மனிதவள மேம்பாட்டு நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகளை திறப்பது குறித்த ஆலோசனை நடத்தப்பட்டது.
அப்போது பேசிய மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே, கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக 2020 டிசம்பர் மாதம் வரை பள்ளி, கல்லூரிகளை திறக்கும் வாய்ப்புகள் என்பது மிகவும் குறைவு.
தற்போது ஆன்லைன் வழியே பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்வி நிறுவனங்கள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த இறுதி முடிவை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என்றார்.
0
0