“வங்கத்தின் மகள் ரியா சக்ரவர்த்தி”..! கொல்கத்தாவில் பேரணி நடத்திய காங்கிரஸ் தொண்டர்கள்..!
12 September 2020, 7:08 pmசுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் முக்கிய நபராகக் கருதப்படும் நடிகர் ரியா சக்ரவர்த்தியை அரசியல் ரீதியாக கட்டம் கட்டுவதாகக் கூறி, கொல்கத்தாவில் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் இன்று ரியா சக்ரவர்த்திக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர்.
கோஷங்களை எழுப்பி, ரியாவை “வங்காளத்தின் மகள்’ என்று சித்தரித்த காங்கிரஸ் ஆதரவாளர்கள், பாஜக ரியாவுக்கு எதிராக மத்திய அரசின் புலனாய்வு நிறுவனங்களை தவறாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினர்.
ரியாவை குறிப்பிட்டு மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசை விமர்சித்த இரண்டு நாட்களுக்கு பின்னர் இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
“ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி ஒருபோதும் வங்காளிகளின் மனதைக் கவரும் வாய்ப்பை இழக்கவில்லை. பாஜகவின் ஆதரவுத் தளம் என்று அழைக்கப்படும் வங்காளரல்லாதவர்களுக்கு எதிராக வங்காள மொழி பேசும் வாக்காளர்களை ஒருங்கிணைப்பதை அவர் எப்போதும் நோக்கமாகக் கொண்டுள்ளார். இன்றைய பேரணி பெங்காலி வாக்காளர்களை அழைத்துச் செல்வதாக இருந்தது.” என காங்கிரசின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.
இந்நிலையில், சுஷாந்த் வழக்கு கடந்த மூன்று மாதங்களாக விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், திடீரென தற்போது ரியாவுக்கு ஆதரவளிக்கும் காங்கிரஸின் முடிவு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வங்காள உணர்வை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் அடையும் ஒரு நடவடிக்கை என்று கூறப்படுகிறது.
0
0