இனி கொரோனா சோதனை வெறும் 500 ரூபாயில்..! டாடாவின் சோதனைக் கருவிக்கு அனுமதி..! டிஜிசிஐ அதிரடி..!

20 September 2020, 11:46 am
Feluda_Low_Cost_Corona_Test_Kit_UpdateNews360
Quick Share

கடந்த ஏப்ரல் 2020’இல், கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஆரம்ப கட்டங்களில் இருந்தபோது, ​​புது டெல்லியில் உள்ள சிஎஸ்ஐஆர் நிறுவனத்தின் ஜீனோமிக்ஸ் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் கவுன்சிலில் இரண்டு வங்காள வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் சௌவிக் மைதி மற்றும் டாக்டர் திபோஜோதி சக்ரவர்த்தி தலைமையிலான குழு, உங்களிடம் கொரோனா இருக்கிறதா என்பதை சில நிமிடங்களில் உங்களுக்குச் சொல்ல எளிய ‘ஸ்ட்ரிப்-டெஸ்ட்’ கொண்டு வந்தது. அதற்கு அவர்கள் “பெலூடா” என்று பெயரிட்டனர்.

இந்நிலையில் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரல் அமைப்பான டிஜிசிஏ பெலுடாவை வர்த்தக ரீதியாக தொடங்க ஒப்புதல் அளித்துள்ளது.

பெலூடா சோதனை

இந்த சோதனை கொரோனா வைரஸின் மரபணு வரிசையைக் கண்டறிய உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன சிஆர்ஐஎஸ்பிஆர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. டாடா சிஆர்ஐஎஸ்பிஆர் சோதனை பாரம்பரிய ஆர்டி-பிசிஆர் சோதனைகளின் துல்லியமான அளவை விரைவான கண்டறியும் நேரம், குறைந்த விலை உபகரணங்கள் மற்றும் சிறந்த பயன்பாட்டின் எளிமையுடன் கொண்டு வந்துள்ளது.

கொரோனாவை ஏற்படுத்தும் வைரஸை வெற்றிகரமாக கண்டறிய விசேஷமாக மாற்றியமைக்கப்பட்ட கேஸ் 9 புரதத்தை பயன்படுத்தி உலகின் முதல் கண்டறியும் சோதனையாக டாடா சிஆர்ஐஎஸ்பிஆர் சோதனை உள்ளது என்று சிஎஸ்ஐஆர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், சிஆர்ஐஎஸ்பிஆர் என்பது ஒரு எதிர்கால தொழில்நுட்பமாகும். இது எதிர்காலத்தில் பல நோய்க்கிருமிகளைக் கண்டறியவும் கட்டமைக்கப்படலாம். “டாடா குழுமம் சி.எஸ்.ஐ.ஆர்-ஐ.ஜி.ஐ.பி மற்றும் ஐ.சி.எம்.ஆருடன் இணைந்து பணியாற்றியது. இது உயர் தரமான சோதனையை உருவாக்க உதவுகிறது. இது கொரோனா சோதனையை விரைவாகவும் பொருளாதார ரீதியாகவும் மேம்படுத்துவதற்கு உதவுகிறது. இது பாதுகாப்பான, நம்பகமான, மலிவு விலையுள்ள மேட் இன் இந்தியா தயாரிப்பாகும்” என சிஎஸ்ஐஆர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.

எப்படி வேலை செய்கிறது?
சிஆர்ஐபிஎஸ்ஆர் என்பது நோய்களைக் கண்டறிய பயன்படுத்தப்படும் ஒரு மரபணு எடிட்டிங் தொழில்நுட்பமாகும். இந்த தொழில்நுட்பத்தை சி.எஸ்.ஐ.ஆர்-ஐ.ஜி.ஐ.பி (இன்ஸ்டிடியூட் ஆப் ஜீனோமிக்ஸ் அண்ட் ஒருங்கிணைந்த உயிரியல்) உருவாக்கியுள்ளது.

இது சோதனையின் செலவுகளை குறைக்கவும் உதவும். தற்போது பயன்படுத்தப்படும் ஆர்டி-பிசிஆர் சோதனைக்கு லட்சக்கணக்கான மதிப்புள்ள இயந்திரங்கள் தேவைப்படுகின்றன மற்றும் சோதனையின் விலை தனியார் ஆய்வகங்களில் ரூ 4,500’ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
ஆனால் இந்த பெலூடா சோதனைக்கு சுமார் 500 ரூபாய் மட்டுமே செலவாகும். இது கர்ப்ப பரிசோதனை முறைகளைப் போலவே கவுண்டரிலும் பரவலாகக் கிடைக்கும் என்று சிஎஸ்ஐஆர் மேலும் தெரிவித்துள்ளது.

பெலுடா பெயர் வைத்தது எதற்காக?
ஒரு பெயரில் என்ன இருக்கிறது எனத் தோன்றலாம்.

FELUDA என்பது FNCAS9 Editor Linked Uniform Detection Assay என்பதன் தொழில்நுட்ப ரீதியான ஒரு சுருக்கமாகும். மற்றும் எழுத்தாளர் சத்யஜித் ரேயின் நாவல்களில் பிரபலமாக தோன்றிய பிரபல கற்பனையான பெங்காலி கதாப்பாத்திரம் பெலூடாவின் பெயர் இதற்கு வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மே மாதம் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், தனது அணியுடன் சேர்ந்து சோதனையை உருவாக்கிய டாக்டர் திபோஜயோதி சக்ரவர்த்தி, தான் ஒரு சத்யஜித் ரே ரசிகர் என்றும், தனது மனைவி தான் இந்த பெயரைக் கொண்டு வந்ததாகவும் கூறினார்.

சத்யஜித் ரே நாவலில் வரும் பெலூடா என்று அழைக்கப்படும் புரோடோஷ் சந்திர மிட்டர் ஒரு வங்காள தனியார் புலனாய்வாளர் ஆவார். அவர் ரேவின் நாவல்கள் மற்றும் சிறுகதைகளில் தவறாமல் தோன்றுவார். நாவல்களில், பெலூடா தனது உறவினர் தபேஷ் ரஞ்சன் மித்ரா அல்லது டாப்ஷே மற்றும் மிகவும் நகைச்சுவையான, ஆனால் அன்பான லால் மோகன் பாபு ஆகியோருடன் பல சாகசங்களை மேற்கொள்வார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் மூலம், பெலூடாவும் அவரது இரு தோழர்களும் பல வங்காள இலக்கிய ஆர்வலர்களின் இதயங்களை பல தசாப்தங்களாக கவர்ந்து வந்துள்ளனர்.

பெலூடா தனது புத்திசாலித்தனமான மனம் மற்றும் நகைச்சுவையான பதில்களுக்காகவும் அறியப்பட்டார். நிச்சயமாக, குற்றத்தை விரைவாக தீர்க்கும் திறனுக்காகவும் இருந்தார். இதனால் சி.எஸ்.ஐ.ஆர் விஞ்ஞானிகள் விரைவான கொரோனா சோதனைக்கு பெயரிட முடிவு செய்திருக்கலாம்.

அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி) போன்ற பிற நாடுகளின் விஞ்ஞானிகள் இந்த அணுகுமுறையை சோதித்து வருகையில், இந்தியா இதை சோதனை செய்து வெற்றி கண்டுள்ளதோடு, வணிக பயன்பாட்டிற்கும் தற்போது கொண்டு வருகிறது.