டெல்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டம்: எல்லைகள் மூடல்…போக்குவரத்து மாற்றம்..!!

29 January 2021, 10:50 am
borders close - updatenews360
Quick Share

புதுடெல்லி: விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக டெல்லி எல்லைகள் மூடப்பட்டு பாதுகாப்புக்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வியை சந்தித்த சூழலில், குடியரசு தினத்தன்று டெல்லிக்குள் டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது. இதில் கடும் வன்முறை வெடித்தது. விவசாயிகளில் ஒரு தரப்பினர் போலீசாரால் அனுமதிக்கப்பட்ட பாதைகளை மீறி தடுப்புகளை உடைத்து கொண்டு முன்னேறினர்.

அதன்பின்னர் விவசாயிகள் தங்கள் அமைப்பின் கொடியை செங்கோட்டையில் ஏற்றினர். இதில், போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் மோதல் ஏற்பட்டது. டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வன்முறை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியில் டிராக்டர் பேரணியை முடித்து கொண்டு திரும்பிய விவசாயிகள், அவர்கள் ஏற்கனவே போராட்டம் நடத்திய எல்லைப்பகுதிகளில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளதால் எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டம் காரணமாக காசிப்பூர், சிங்கு, ஆச்சந்தி, மங்கேஷ், சபோலி, பியாவ் மன்யாரி எல்லைகள் மூடப்பட்டன. போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் எல்லை பகுதிகளில் பாதுகாப்பு பணிகளுக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

நரேலா பகுதியருகே தேசிய நெடுஞ்சாலை எண் 44 பகுதியில் இருந்து போக்குவரத்து மாற்றி விடப்பட்டு உள்ளது. வெளிவட்ட சாலை பகுதிகள், ஜி.டி.கே. சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை எண் 44 ஆகிய பகுதிகளை தவிர்க்கும்படி போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். காசிப்பூர் எல்லை மூடப்பட்டு, தேசிய நெடுஞ்சாலை எண் 24 மற்றும் தேசிய நெடுஞ்சாலை எண் 9 ஆகியவற்றின் போக்குவரத்து வேறு பகுதிகளில் திருப்பி விடப்பட்டு உள்ளது.

சாலை எண் 56, 57ஏ, கொண்டிலி, பேப்பர் மார்க்கெட், டெல்கோ டி பாயிண்ட், இ.டி.எம். மால், அக்ஷர்தாம் மற்றும் நிஜாமுதீன் கட்டா ஆகிய பகுதிகளிலும் போக்குவரத்து மாற்றி விடப்படுகிறது. இந்த பகுதிகளிலும் மற்றும் விகாஸ் மார்க் பகுதியிலும் வாகன போக்குவரத்து கடும் நெருக்கடியாக காணப்படுகிறது என டெல்லி போக்குவரத்து போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Views: - 0

0

0