மழை இல்லை, செம வெயில் – சாமி சிலைகளை போட்டு உடைத்த ஆசாமி

15 April 2021, 11:19 am
Quick Share

நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது, மழையே இல்லை இதனால் கடவுள் மீது கோபம் கொண்ட நபர் ஒருவர், கடவுள் சிலைகளை சேதப்படுத்திய சம்பவம், தலைநகர் டெல்லியில் அரங்கேறி உள்ளது.

டெல்லியின் தென்மேற்கு பகுதியில் உள்ள கக்ரோலா பகுதியில் உள்ள கோயிலின் சிலைகள் சேதமடைந்து இருப்பதை பார்த்த கோயில் பூசாரி, போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்து இருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், பாரத் விகார் ஜே ஜே காலனி பகுதியை சேர்ந்த 50 வயதான மகேஷ் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல நாட்களாக மழையே பெய்யவில்லை. இதன்காரணமாக, தான் கடவுள் மீது கொண்ட கோபத்தின் காரணத்தினாலேயே, ஹனுமார் உள்ளிட்ட கடவுளர்களின் சிலைகளை சேதப்படுத்தியதாக அவர் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட செய்தி, அப்பகுதியில் காட்டுத்தீயாக பரவிய நிலையில், பஜரங் தள் உள்ளிட்ட இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் அவர்களது போராட்டம் கைவிடப்பட்டது.

மகேஷ் மீது இந்திய குற்றவியல் தண்டனை சட்டம் 295 மற்றும் 295ஏ பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. சிலைகளை சேதப்படுத்த பயன்படுத்தப்பட்ட கோடாலியும் அவரிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 37

0

0