தேர்தலில் சீட் கொடுக்காததால் விரக்தியா..? முன்னாள் பீகார் டிஜிபி விளக்கம்..!

By: Sekar
8 October 2020, 10:54 am
_Ex_Bihar_DGP_Gupteshwar_Pandey_UpdateNews360
Quick Share

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் முதல் பட்டியலை ஐக்கிய ஜனதா தளம் வெளியிட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, சட்டசபை தேர்தலில் சீட் மறுக்கப்பட்ட முன்னாள் பீகார் டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே, தனது வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை பார்த்துள்ளதாகவும், தனது ஒட்டுமொத்த வாழ்க்கையும் பீகார் மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த மாதம், பாண்டே டிஜிபி பதவியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். பின்னர் நிதீஷ் குமாரின் கட்சியில் சேர்ந்தார். அக்டோபர் 28 முதல் துவங்க திட்டமிடப்பட்டுள்ள பீகாரில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போட்டியிடும் 115 வேட்பாளர்களின் பட்டியலை ஐக்கிய ஜனதா தளம் வெளியிட்டது. இதில் பாண்டேவின் பெயர் இடம் பெறாததோடு தற்போது உள்ள 11 எம்.எல்.ஏ.க்களுக்கும் மீண்டும் போட்டியிட சீட் மறுக்கப்பட்டுள்ளது.

“எனது பல நலம் விரும்பிகளின் தொலைபேசி அழைப்புகளால் நான் வருத்தப்படுகிறேன். அவர்களின் கவலை மற்றும் கஷ்டங்களையும் நான் புரிந்துகொள்கிறேன். பதவியிலிருந்து விலகிய பிறகு, நான் தேர்தலில் போட்டியிடுவேன் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் நான் இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. 

இதில் விரக்தியடைய எதுவும் இல்லை. பொறுமையாக இருங்கள். எனது வாழ்க்கை முழுவதும் போராட்டத்திலேயே கழிந்தது. நான் என் வாழ்நாள் முழுவதும் பொதுமக்களுக்கு சேவை செய்வேன். தயவுசெய்து பொறுமையாக இருங்கள். என்னை அழைக்காதீர்கள்.

என் வாழ்க்கை பீகார் மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. எனது பிறப்பிடமான பக்ஸர் மற்றும் அனைத்து சாதி மற்றும் மதத்தைச் சேர்ந்த அனைத்து மூத்த சகோதரர்கள், சகோதரிகள், தாய்மார்கள் மற்றும் இளைஞர்களையும் நான் வணங்குகிறேன்! உங்கள் அன்பையும் ஆசீர்வாதத்தையும் வைத்திருங்கள்” என்று இந்தியில் எழுதப்பட்ட பேஸ்புக் பதிவில் பாண்டே கூறினார்.

இந்த முறை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று பாண்டே கூறியிருந்தாலும், பீகார் சட்டமன்றத் தேர்தலில் அவர் பக்சர் தொகுதியில் போட்டியிட விரும்புவதாகக் கூறப்படுகிறது. இந்த முறை, தொகுதிப் பங்கீட்டின் ஒரு பகுதியாக பக்ஸர் சட்டமன்றத் தொகுதி பாஜகவுக்கு சென்றது. பாரதீய ஜனதா கட்சி பக்ஸர் தொகுதியைச் சேர்ந்த பரசுராம் சதுர்வேதிக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளது.

எனினும் பாண்டே எம்பியாக மக்களவைக்கோ அல்லது மாநிலங்களவைக்கோ அனுப்பும் முடிவில் நிதீஷ் குமார் இருப்பதால் தான் அவருக்கு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை என அவரின் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

Views: - 40

0

0