கெஜ்ரிவாலின் வேண்டுகோள் புறக்கணிப்பு..! கூட்டம் கூட்டமாக சொந்த ஊர் திரும்பும் புலம் பெயர் தொழிலாளர்கள்..!

19 April 2021, 9:54 pm
migrants_updatenews360
Quick Share

இன்று இரவு முதல் டெல்லியில் 6 நாள் ஊரடங்கை அறிவித்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நகரத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார். இருப்பினும், கெஜ்ரிவாலின் வேண்டுகோள் மக்கள் மீது சிறிதளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. நூற்றுக்கணக்கான மக்கள் டெல்லியின் முக்கிய பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் தங்கள் சொந்த மாநிலத்தை நோக்கி செல்வதற்காக குவிந்தனர்.

அண்டை மாநிலங்களான உத்தரபிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், பீகார் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் நேபாள நாட்டவர்கள் டெல்லியை விட்டு வெளியேறுவதைக் காண முடிந்தது. ஆனந்த் விஹார் முனையத்தில் ஏராளமான மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு செல்வதற்காகக் குவிந்தனர்.

“நான் டெல்லியில் ஒரு வேலை செய்கிறேன். வேலை இன்னும் தொடங்கவில்லை. எனவே இங்கு உட்கார்ந்திருப்பதை விட வீடு திரும்புவது நல்லது” என்று நேபாளத்தைச் சேர்ந்த நவின் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஒரு வீடியோ கான்பெரன்ஸ் பத்திரிகையாளர் சந்திப்பின் போது, முதல்வர் கெஜ்ரிவால், அரசாங்கத்திற்கு ஊரடங்கை விதிக்க முடிவெடுப்பது எளிதான ஒன்றல்ல என்றும் இது ஏழை மற்றும் தினசரி கூலிகளை அதிகம் பாதிக்கிறது என்றாலும், தற்போதைய சூழ்நிலையில் வேறுவழியில்லை என்று கூறினார்.

“ஊரடங்கின் போது டெல்லியை விட்டு வெளியேற வேண்டாம் என்று நான் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். நாங்கள் உங்களை கவனித்துக்கொள்வோம். அதை உறுதிப்படுத்த நான் இருக்கிறேன்.” என்று முதல்வர் கூறினார்.

“சுகாதார அமைப்பு அதன் வரம்பை எட்டும்போதுதான் இது விதிக்கப்பட வேண்டும். ஊரடங்கை முழுமையாகப் பின்பற்றுமாறு நான் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். முந்தைய மூன்று அலைகளில் நாம் செய்ததைப் போல,கொரோனாவின் இந்த நான்காவது கட்டத்தை நாம் ஒன்றாகக் கடப்போம்.” என்று அவர் கூறினார்.

Views: - 78

0

0