புரட்டாசி மாத பூஜைக்காக நாளை சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறப்பு:5 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி

By: Udayaraman
15 September 2021, 11:49 pm
Sabaraimalai - Updatenews360
Quick Share

சபரிமலை ஐயப்பன் கோயிலில் செப்.17ம் தேதி முதல் 21ம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தினமும் 15,000 பேர்களுக்கு மட்டும் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, புரட்டாசி மாத பூஜைகளுக்காக, நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைக்கிறார். வரும் 21 ஆம் தேதி வரை கோவிலில் பூஜைகள் நடைபெற உள்ளன.இந்த நாட்களில் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜைக்கு பின் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மாலை 6 மணிக்கு தீபாராதனை, அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். தினசரி நெய்யபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, படி பூஜை உட்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாக தினசரி 15 ஆயிரம் பக்தர்கள், ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதையொட்டி, சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த 8 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர்., நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். அவ்வாறு அல்லாத பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.ஐயப்ப பக்தர்களுக்கான மருத்துவச் சான்று மற்றும் ஆன்லைன் சான்றிதழ் ஆய்வு நிலக்கல்லில் நடைபெறும். 17 ஆம் தேதி முதல், முன்பதிவு செய்த பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மாத பூஜையை முன்னிட்டு கோவில் நடை திறக்கப்படுவதையொட்டி, தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது.

Views: - 124

0

0