முன்கூட்டியே தனது இறப்பை கணித்தாரா எஸ்.பி.பி? உயிர் பிரிவதற்கு முன்னரே தயாரான சிலை!!
26 September 2020, 5:21 pmஆந்திரா : ஆந்திர சிற்பியிடம் தன்னுடைய சிலையை செதுக்க முன்கூட்டியே கூறியதால் தான் மரணித்துவிடுவோம் என எஸ்.பிபி முன்னரே கணித்துள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மறைந்த பின்னணி பாடகர் எஸ். பி.பாலசுப்ரமணியம் எதையும் முன்னரே யோசித்து சரியாக செயல்படும் திறன் படைத்தவர் என்ற கூறப்படுவதுண்டு. அவருடைய இந்த திறன் காரணமாகவே அடுத்து நடக்க இருப்பது என்ன என்று உணர்ந்து தன்னுடைய வாழ்வில் சரியாக அவர் செயல்பட்டு வந்தார் என்பது அவருடைய நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் கருத்து ஆகும்.
இந்த நிலையில் எஸ்.பி.பி தனது தந்தை சாமமூர்த்தி, தாய் சகுந்தலா அம்மா ஆகியோர் மறைந்த பின் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கொத்த பேட்டையை சேர்ந்த சிற்பி உடையார் ராஜ்குமார் என்பவரிடம் ஆர்டர் கொடுத்து அவர்களுடைய சிலைகளை எஸ். பி.பாலசுப்ரமணியம் செய்தார்.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் உடையார் ராஜ்குமாரை தொடர்பு கொண்ட எஸ்.பி.பி, தன்னுடைய சிலை ஒன்றை செய்து கொடுக்கும்படி தானே ஆர்டர் கொடுத்தார். கொரோனா காரணமாக நேரில் வந்து சிலை செய்வதற்கு தேவையான போட்டோஷூட் நடத்த இயலாது. எனவே சிலை செய்வதற்கு தேவையான போட்டோக்களை அனுப்பி வைக்கிறேன் என்று கூறிய எஸ்பிபி, தன்னுடைய புகைப்படங்களை சிற்பி உடையார் ராஜ்குமாருக்கு இ-மெயிலில் அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் சிற்பி ராஜ்குமார் எஸ்.பி பாலசுப்பிரமணியம் சிலையை செய்து கொண்டிருந்த சமயத்தில் எஸ் பி பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
இதனால் அவர் திரும்பி வந்த பின் சிலையை அவரிடம் ஒப்படைக்கலாம் என்று சிற்பி உடையார் ராஜ்குமார் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் சிற்பி சிலையை செய்து முடித்து இறுதிக்கட்ட பணிகளை தற்போது செய்து வரும் நிலையில், எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் இறுதிப் பயணம் நடைபெற்று விட்டது. இதனால் தன்னுடைய மரணத்தை தான் முன்னதாகவே உணர்ந்து இருப்பாரோ என்ற ஐயப்பாடு ஏற்பட்டுள்ளது.