சிறுத்தையுடன் கழிபறையில் 7 மணி நேரம் சிக்கி கொண்ட நாய்! உயிர் பிழைத்த அதிசயம்

4 February 2021, 12:27 pm
Quick Share

கர்நாடகாவில், சிறுத்தையிடம் தப்பி பிழைக்க ஓடிய நாய், கழிப்பறையில் ஓடி ஒளிய, பின்னாலேயே சென்ற சிறுத்தையும் கழிப்பறைக்குள் மாட்டி கொண்டது. 7 மணி நேரம் ஒன்றாக இருந்தபோதும், சிறுத்தை தாக்காததால், நாய் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது. இச்சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

கர்நாடக மாநிலம் கடப்பாவில் உள்ள பிலினெலே கிராமத்தில் உணவு தேடி சிறுத்தை ஒன்று வந்துள்ளது. அப்போது எதிரில் நாய் ஒன்று கண்ணில் பட, அதனை வேட்டையாட முடிவு செய்த சிறுத்தை நாயை விரட்டி உள்ளது. உயிர் பிழைக்க ஓடிய அந்த நாய், வீடு ஒன்றின் வெளியில் இருந்த பாத்ரூம் கக்கூஸ் ஒன்றில் ஓடி ஒளிந்திருக்கிறது. பின்னாலேயே சென்ற சிறுத்தையும் கக்கூசுக்குள் நுழைந்துள்ளது. ஆனால் அங்கு சென்றபின் தான் சிறுத்தைக்கு தெரிந்தது தான் சிக்கி கொண்டோம் என்று.

காலையில் கக்கூஸ் கதவை திறந்த அந்த வீட்டு பெண்மணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கழிப்பறைக்கு உள்ளே சிறுத்தையும், நாயும் இருப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்த அந்த பெண், வெளிப்புறமாக தாழ்ப்பாள் போட்டு வனத்துறைக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், சிறுத்தையை பிடிக்க எடுத்த முயற்சி 7 மணி நேரம் நீடித்திருக்கிறது. கடும் முயற்சிக்கு பின் சிறுத்தை பிடிபட, நாயும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

கக்கூஸ் மேற்புறத்திலிருந்து சிறுத்தையும், நாயும் ஒன்றாக இருப்பதை போட்டோ எடுத்த ஒரு நபர் அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர, அது வைரலானது. சிறுத்தை நாயை ஏன் தாக்கவில்லை என டுவிட்டரில் ஒரு பட்டிமன்றமே ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த போட்டோவை வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வானும் பகிர்ந்துள்ளார். ‘இந்த நாள் நாய்க்கான நாளாக அமைந்து விட்டது. சிறுத்தையுடன் பலமணி நேரம் பாத்ரூமில் சிக்கி கொண்ட நாய் உயிர் பிழைத்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இந்தியாவில் தான் நிகழும்’ என பதிவிட்டு பகிர, அது டுவிட்டரில் வைரலாகி உள்ளது.

Views: - 0

0

0