ஓடிடி தளங்களைக் கட்டுப்படுத்தும் வரைவு விதிகள் இன்று வெளியீடு..? மத்திய அரசு முடிவு..!
25 February 2021, 1:08 pmஅனைத்து சமூக ஊடகங்கள், ஸ்ட்ரீமிங் அல்லது ஓடிடி தளங்கள் மற்றும் செய்தி தொடர்பான வலைத்தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான வரைவு விதிகளை அரசாங்கம் தயார் செய்துள்ள நிலையில் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தகவல் தொழில்நுட்பம் (இடைத்தரகர்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைக் குறியீடு) விதிகள், 2021 என்ற தலைப்பில், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000’இன் 87’வது பிரிவின் கீழ் அரசாங்கம் இந்த வரைவு விதிகளை வெளியிடுகிறது.
இது தொடர்பாக வெளியான ஒரு அறிக்கையின்படி, அரசாங்க வரைவுக் கொள்கை ஓடிடியில் மூன்று அடுக்கு சோதனை முறையைக் கோரியுள்ளது.
இந்த விதிகளின் கீழ் சமூக ஊடக நிறுவனங்களில் வெளியாகும் உள்ளடக்கங்களை கண்காணிக்க பொறுப்பான அதிகாரிகளை நியமிக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. மேலும் ஓடிடி ஸ்ட்ரீமிங் சேவை வழங்குநர்கள் மூன்று அடுக்கு ஒழுங்குமுறை கட்டமைப்பின் கீழ் கொண்டுவரப்படுவார்கள்.
இது முன்மொழியப்பட்ட புதிய விதிகளின்படி, சமூக ஊடக நிறுவனங்களையும் உள்ளடக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேஸ்புக் மற்றும் நெட்ஃபிக்ஸ் போன்றவை ஓடிடி இயங்குதளங்கள் என்று அழைக்கப்படுகின்றன. கூடுதலாக, இந்த தளங்களில் நிகழ்ச்சிகள் யு (யுனிவர்சல்) அல்லது ஏ (வயது வந்தோர்) போன்ற மதிப்பீடுகளைக் கொண்டு செல்ல வேண்டும். அவை தற்போது செய்யத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் சில விதிகள் அவர்களுக்குப் பொருந்தினாலும், இரு நிறுவனங்களையும் ஒழுங்குபடுத்துவதற்கான விதிமுறைகளையும் கட்டமைப்பையும் மத்திய அரசு வகுத்துள்ளது.
விதிகள், இறுதி செய்யப்படும்போது, டிஜிட்டல் செய்தி ஊடகங்களுக்கும் பொருந்தும் வகையில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஓடிடி முதல் அடுக்கில் ஒரு சுய-கட்டுப்பாட்டு அமைப்பும், இரண்டாவது அடுக்கில் ஒரு ஒழுங்குமுறை மேற்பார்வை அமைப்பும் மற்றும் மூன்றாம் அடுக்கில் ஒரு அரசு அமைப்பும் கொண்டிருக்கும் வகையில் இருக்கும்.
ஓடிடி மற்றும் சமூக ஊடக தளங்களில் உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கான கோரிக்கைகள் நீண்ட நாட்களாகவே உள்ள நிலையில், தற்போது வரைவு அறிக்கைகள் மக்களின் கருத்துக் கேட்புக்காக வெளியிடப்பட உள்ளது.
0
0