21 நாட்களுக்கு பிறகு ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்… சிறையில் இருந்து வெளியே வர இவர்தான் காரணமா..?

Author: Babu Lakshmanan
28 October 2021, 4:55 pm
aryan khan - updatenews360
Quick Share

போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கானுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் உள்ளிட்டோரின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.

மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பல் ஒன்றில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு நடத்திய சோதனையில், போதைப் பொருட்களை பயன்படுத்திய 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான், அர்பாஸ் செத் மெர்ச்சன்ட், முன்முன் தாமெக்கா உள்ளிட்ட பிரபலங்களும் சிக்கினர்.

இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஷாருக்கான் மகன் ஆர்யன்கானுக்கு 14 நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டது. அதன்பேரில், அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, மும்பை உயர்நீதிமன்றத்தில் ஆர்யன்கான் தரப்பில் 2வது முறையாக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த முறை இந்த மனு விசாரணைக்கு வந்த போது, ஆர்யன்கான் உள்ளிட்டோரிடம் எவ்வித போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும், இந்த வழக்கு திட்டமிட்டு தொடுக்கப்பட்ட வழக்கு என்றும் வாதிடப்பட்டது.

ஆனால், ஆர்யன்கானுக்கு ஜாமீன் வழங்க போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், மீண்டும் ஆர்யன்கானின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இது ஷாருக்கான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது.

ஏற்கனவே, தனது மகன் ஆர்யன்கான் சிறை உணவை தவிர்த்து, வெறும் தண்ணீரை மட்டுமே குடித்து வந்தது ஷாருக்கானை பெரிதும் பாதிப்படையச் செய்தது. எனவே, அவரை எப்படியாவது வெளியே கொண்டு வர வேண்டும் என்று பல முயற்சிகளை ஷாருக்கான் மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், 3வது முறையாக ஆர்யன்கான் தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் 3வது முறையாக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த முறை, ஆர்யன்கான் சார்பில் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோக்தகி ஆஜராகி வாதாடினார். அவர்களின் வாதத்தை கேட்ட நீதிபதி, ஆர்யன்கானுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இதன்மூலம் 21 நாட்கள் சிறையில் இருந்த ஆர்யன்கான், ஜாமீனில் வெளியே வர இருக்கிறார். இது ஷாருக்கானின் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 245

0

0