வெளிநாட்டு சிறப்பு விருந்தினர் இல்லாமல் குடியரசு தின விழா..! ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது மத்திய அரசு..!

14 January 2021, 7:58 pm
republic_day_updatenews360
Quick Share

ஜனவரி 26 குடியரசு தின அணிவகுப்பில் இந்த ஆண்டு சிறப்பு விருந்தினராக எந்தவொரு வெளிநாட்டு நாட்டுத் தலைவரும் பங்கேற்க மாட்டார் என்பதை மத்திய வெளியுறவு அமைச்சகம் இன்று உறுதிப்படுத்தியது.  

பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றிய மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, கொரோனா தொற்றுநோயால் எழும் சூழ்நிலை காரணமாக, இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக எந்தவொரு வெளிநாட்டு அரச தலைவரும் அல்லது அரசாங்கமும் பங்கேற்க வைக்க வேண்டாம் என்று அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

முன்னதாக, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் குடியரசு தின நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இந்தியாவின் அழைப்பை ஏற்றுக்கொண்டார். ஆனால், கொரோனா வைரஸ் தொற்றின் புதிய வகை பிரிட்டனில் தீவிரமடைந்து வருவதை அடுத்து, பிரிட்டன் பிரதமர் தனது வருகையை ரத்து செய்தார்.

அழைப்பை ஏற்றுக்கொண்டபோது, ​​பிரிட்டன் பிரதமர் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு, “உலகளாவிய பிரிட்டனுக்கான ஒரு உற்சாகமான ஆண்டின் தொடக்கத்தில் அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு வருவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது எங்கள் இருதரப்பு உறவில் குவாண்டம் பாய்ச்சலை வழங்க எதிர்பார்க்கிறேன். பிரதமர் நரேந்திர மோடியும் நானும் இதை சாதிக்க உறுதிபூண்டுள்ளோம்.” எனத் தெரிவித்திருந்தார்.

எனினும், இங்கிலாந்தில் ஒரு புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட பின்னர் அவரது வருகை ரத்து செய்யப்பட்ட பின்னர், போரிஸ் ஜான்சன் பிரதமர் நரேந்திர மோடியை அழைத்து இந்தியாவுக்கு பயணம் செய்ய இயலாமையை தெரிவித்தார். பிரிட்டன் பிரதமர் 2021 முதல் பாதியில் இந்தியாவுக்கு ஒரு பயணம் மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

இதற்கிடையே போரிஸ் ஜான்சன் தனது வருகையை நிறுத்த முடிவு செய்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டு இந்திய குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக சுரினாம் குடியரசுத் தலைவராக உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சந்திரிகேபர்சாத் சந்தோகி சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகின.

ஆனால் தற்போது அனைத்து ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்த ஆண்டு சிறப்பு விருந்தினர் யாரும் இல்லை என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

கடைசியாக 1966’ஆம் ஆண்டில் ஜனவரி 11’ஆம் தேதி அன்றைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி இறந்த அசாதாரண சூழ்நிலையால், குடியரசு தினத்திற்கு சிறப்பு விருந்தினர் அழைக்கப்படாமல் இருந்த நிலையில், அதற்கு பிறகு கொரோனா காரணமாக இந்த ஆண்டு சிறப்பு விருந்தினர் இல்லாமல் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது.

முன்னதாக 1952 மற்றும் 1953 ஆகிய ஆண்டுகளிலும் குடியரசு தின அணிவகுப்பின் போது ஒரு சிறப்பு விருந்தினர் அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 7

0

0