மகாராஷ்டிரா சபாநாயகராக பாஜகவின் ராகுல் நர்வேகர் தேர்வு : நாளை பெரும்பான்மையை நிரூபிக்க போவது யார்?

Author: Udayachandran RadhaKrishnan
3 July 2022, 12:36 pm
Maharashtra Bjp Speaker - Updatenews360
Quick Share

மகாராஷ்டிராவில் நிலவும் பரபரப்பான சூழலுக்கு மத்தியில் உத்தவ் தாக்கரேவின் ராஜினாமாவை தொடர்ந்து,ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா மாநில முதல்வராக பதவியேற்றார்.

மேலும்,பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து,மகாராஷ்டிரா சட்டசபையில் நாளை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான புதிய அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலையில்,மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் இரண்டு நாள் சிறப்பு கூட்டம் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.

அதேசமயம்,மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு சபாநாயகரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில்,சற்று முன்னர் அப்பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. சபாநாயகர் பதவிக்கு பாஜக சார்பில் ராகுல் நர்வேகரும்,அதே சமயம்,மகாவிகா அகாதி கூட்டணி சார்பில் சிவசேனாவின் ராஜன் சால்வி ஆகியோர் நேரிடையாக போட்டியிட்ட நிலையில்,வாக்கெடுப்பு நடைபெற்றது.

அதன்படி,முதலாவதாக மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே,துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் தங்களது வாக்குகளை செலுத்தினர்.

இதனிடையே,மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு பெரும்பான்மையை பொருத்தமட்டில் 145 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே தேவையாக உள்ள நிலையில்,ஏற்கனவே பாஜகவுக்கு 161 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது.இதனால், பாஜக சார்பில் போட்டியிடும் ராகுல் நர்வேகரும் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில்,மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக ராகுல் நர்வேகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மகாராஷ்டிரா சட்டப்பேரவை சபாநாயகர் பதவி ஒரு ஆண்டுக்கும் மேலாக காலியாக இருந்த நிலையில்,தற்போது நடைபெற்ற தேர்தலில் ராகுல் நர்வேகர் வெற்றி பெற்று புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.ராகுல் நர்வேகருக்கு 164 வாக்குகள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 581

0

0