மைசூரில் தசரா விழா ஒத்திகை: பீரங்கி சத்தப் பயிற்சியின் போது மிரண்ட யானைகள்…போராடி கட்டுப்படுத்திய பாகன்கள்…!!

Author: Aarthi Sivakumar
1 October 2021, 4:53 pm
Quick Share

மைசூரு: தசரா விழா ஒத்திகையின் போது வெடிக்கப்பட்ட பீரங்கி சத்தம் கேட்டு 2 யானைகள் மிரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழா வரும் 7ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை நடக்கிறது. அந்த விழா ஜம்பு சவாரி ஊர்வலத்துடன் முடிவடைகிறது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அரண்மனை வளாகத்திலேயே தசாரா விழாவை எளிமையாக கொண்டாட அரசு முடிவெடுத்துள்ளது.

அதன் காரணமாக, ஆண்டுதோறும் நடக்கும் 16 வகையான பாரம்பரிய நிகழ்ச்சிகளில் 7 அல்லது 8 நிகழ்ச்சிகளை மட்டும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் ஜம்பு சவாரி ஊர்வலமும் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டுபோல் இந்த ஆண்டும் அரண்மனை வளாகத்தில் அபிமன்யு என்ற யானை மீது 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரி வைக்கப்படும். அதற்குள் அலங்கரிக்கப்பட்ட சாமுண்டீஸ்வரி சிலை வைக்கப்படும்.

முன்னதாக அபிமன்யு மீது மர அம்பாரி வைக்கப்பட்டு அதற்குள் 300 கிலோ எடையுள்ள மணல் மூட்டைகள் வைத்து பயிற்சி கொடுக்கப்படும். ஜம்பு சவாரியின் ஆரம்ப கட்டமாக பல்வேறு யானை முகாம்களில் இருந்து யானைகள் மைசூருவுக்கு வரவழைக்கப்பட்டன. அந்த யானைகளுக்கு சத்தான உணவு அளிக்கப்பட்டு, உடல் நல சோதனைகளும் செய்யப்படுகின்றன.

மேலும், மக்கள் மத்தியில் நடைபயிற்சி, பாரம் சுமப்பது உள்ளிட்ட வெவ்வேறு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. பயிற்சியின் முதல் நாளான நேற்று அரண்மனை அருகில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன் கோவில் அருகில் 8 யானைகள் மற்றும் போலீஸ்காரர்களின் குதிரைகள் அணிவகுப்பாக நிற்க வைக்கப்பட்டன.

அப்போது, நிபுணர்கள் தலைமையில் 6 பீரங்கிகள் மூலம் 3 முறை வெடித்து ஒத்திகை பார்க்கப்பட்டது. அப்போது அதன் சத்தம் கேட்டு லட்சுமி மற்றும் கோபாலசுவாமி ஆகிய 2 யானைகள் மிரண்டன. அவற்றை பாகன்கள் கட்டுப்படுத்தி, அழைத்து வந்து மீண்டும் வரிசையில் நிற்க வைத்தனர்.

அப்போது தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு யானை உள்ளிட்ட மற்ற யானைகள் அமைதியாக நின்று கொண்டிருந்தன. இந்த காட்சிகளை சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பொதுமக்கள் சற்று தூரத்தில் நின்று ரசித்து கொண்டிருந்தார்கள். தசரா ஒத்திகையின் போது பீரங்கி சத்தம் கேட்டு யானைகள் மிரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 454

0

0