செம்மர கடத்தலின் போது கார் விபத்துக்குள்ளாகி 5 பேர் கருகி பலியான விவகாரம் : கும்பலின் தலைவன் உட்பட 11 பேர் கைது!!

9 November 2020, 2:13 pm
Andhra Arrest - Updatenews360
Quick Share

ஆந்திரா : டிப்பர் லாரி மீது செம்மரக்கடத்தல் கார் மோதி 5 பேர் உயிருடன் கருகிய விபத்து தொடர்பான வழக்கில் செம்மர கடத்தல் அபகரிப்பு குழுத் தலைவர் கோவையை சேர்ந்த ஷேக் அப்துல் ஹக்கீம் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் கடப்பாவில் கடந்த 1 ம் தேதி அதிகாலை 3 மணிக்கு வல்லூறு அருகே டிப்பர் லாரி மீது செம்மரங்களை கடத்தி சென்று கொண்டிருந்த கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. மேலும் செம்மரக் கடத்தலுடன் தொடர்புடைய மற்றொரு காரும் அதே விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் 3 வாகனங்களும் தீயில் எரிந்து கருகியதோடு செம்மரங்களை கடத்தி சென்று கொண்டிருந்த காரில் இருந்த சேலம், கள்ளகுறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், கோவையில் துணிகடை வைத்து நடத்தியபடி பெங்களூரை மையமாகக் கொண்டு செம்மரக்கடத்தலில் ஈடுப்பட்டு வந்த ஷேக் அப்துல் ஹக்கீம் என்பவருடைய செம்மர அபகரிப்பு குழு காரில் கடத்திச் செல்லப்பட்டு கொண்டிருந்த செம்மரக்கட்டைகளை அபகரித்து செல்வதற்காக வேறொரு வாகனத்தில் விரட்டி வந்த போது, அபகரிப்பு குழுவிடம் இருந்து தப்புவதற்காக செம்மரக் கடத்தலில் ஈடுபட்டவர்கள் தங்கள் வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றதால் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

இதன் அடிப்படையில் செம்மர அபகரிப்பு குழு தலைவர் ஷேக் அப்துல் ஹக்கீம் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் கடப்பா மாவட்டம் ராஜம்பேட்டை அருகே செம்மரங்களை கடத்தி சென்று கொண்டிருந்த ஷேக் அப்துல் ஹக்கீம் மற்றும் கடப்பவை சேர்ந்த கடத்தல்காரர்கள் உட்பட 11 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஒரு கார், 3 மோட்டார் சைக்கிள்கள் 9 செல்போன்கள் ஆகியவற்றை கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

சேக் அப்துல் ஹக்கீம் மீது கடப்பா மாவட்டத்தில் 14 வழக்குகளும், சித்தூர், ஆனந்தபுரம், உள்ளிட்ட மாவட்டத்தில் 13 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இந்த கடத்தல் வழக்கிலும் வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதாக கடப்பா எஸ்.பி.அன்புராஜன் தெரிவித்தார்.

Views: - 19

0

0