குழந்தைகளிடம் கோவாக்சின் தடுப்பூசி சோதனை..! 2 மற்றும் 3 ஆம் கட்ட ஆய்வை மேற்கொள்ள மத்திய அரசின் நிபுணர் குழு ஒப்புதல்..!

12 May 2021, 8:16 pm
Covaxin_UpdateNews360
Quick Share

பாரத் பயோடெக்கின் கொரோனா தடுப்பூசி கோவாக்சின் 2 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் மீது இரண்டாம் கட்ட / மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைக்கு நிபுணர் குழுவால் பரிந்துரைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. எய்ம்ஸ் மருத்துவமனைகளின் டெல்லி, பாட்னா மற்றும் நாக்பூரின் மெடிட்ரினா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் 525 பேரிடம் சோதனை நடைபெறும் எனத் தெரிகிறது.

மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (சி.டி.எஸ்.கோ) கொரோனா குறித்த நிபுணர் குழு (எஸ்.இ.சி) நேற்று ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக்கின் விண்ணப்பத்தின் பேரில் 2 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளிடம் கோவாக்சின் இரண்டாம் கட்டம் / மூன்றாம் மருத்துவ பரிசோதனைகளை நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஆய்வு செய்தது.

“விரிவான கலந்துரையாடலுக்குப் பிறகு, 2 முதல் 18 வயதுக்குட்பட்ட முழு வீரியன் செயலிழந்த கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முன்மொழியப்பட்ட கட்டம் II / III மருத்துவ பரிசோதனையை நடத்த குழு பரிந்துரைத்தது. இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனையின் இடைக்கால பாதுகாப்பு தரவை நிறுவனம்,ஆய்வின் மூன்றாம் கட்டத்திற்குச் செல்வதற்கு முன் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்படுகிறது.” என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, பிப்ரவரி 24 தேதியிட்ட எஸ்.இ.சி கூட்டத்தில் இந்த திட்டம் விவாதிக்கப்பட்டது. மேலும் திருத்தப்பட்ட மருத்துவ சோதனை நெறிமுறையை சமர்ப்பிக்க நிறுவனம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) உடன் இணைந்து பாரத் பயோடெக் உருவாக்கிய கோவாக்சின், இந்தியாவின் தற்போதைய கொரோனா தடுப்பூசி இயக்கத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

Views: - 126

0

0