மத்திய அரசு பணியாளர்களின் இடைக்கால ஓய்வூதியம் நீட்டிப்பு: ஓராண்டு வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு..!!

6 May 2021, 9:20 am
Quick Share

புதுடெல்லி: மத்திய அரசு பணியாளர்களின் இடைக்கால ஓய்வூதியம் ஓராண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை, நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது முறையீடுகள் துறை ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளுடன் பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று ஆன்லைன் மூலமாக ஆலோசனை நடத்தினார். இதில் கொரோனா பரவலை முன்வைத்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

கொரோனா காரணமாக இடைக்கால ஓய்வூதிய கால அளவை ஓராண்டுவரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஓய்வு பெறும் தேதியில் இருந்து ஓராண்டுவரை இடைக்கால ஓய்வூதியம் வழங்கவும், இடைக்கால குடும்ப ஓய்வூதியத்தை தாராளமயமாக்கவும் முடிவு செய்யப்பட்டது.

பணி ஓய்வுக்குப்பின் ஓய்வூதிய ஆவணங்களை சமர்ப்பிக்காமலேயே மரணித்துள்ள ஊழியர்களின் குடும்பத்தினர் சிரமப்படாமல் இருக்கும் வகையில், அவர்களுக்கான ஓய்வூதிய நிலுவைத்தொகை வழங்குவதற்கான உத்தரவு வழங்குவதற்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் அவரது மரணத்துக்குப்பின்னர் குடும்பத்துக்கு, குடும்ப ஓய்வூதியம் வழங்குவதற்கும் முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக குடும்ப ஓய்வூதிய கோரல் மற்றும் இறப்பு சான்றிதழை தகுதியான குடும்ப உறுப்பினரிடம் இருந்து பெற்று தாமதமின்றி நடவடிக்கை எடுக்குமாறு ஜிதேந்திர சிங் அறிவுறுத்தியதாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Views: - 144

0

0