அமிதாப் பச்சனுக்கு கண் அறுவை சிகிச்சை: விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை…!!

1 March 2021, 1:19 pm
amitabh-bachchan-updatenews360
Quick Share

நடிகர் அமிதாப் பச்சன் தனக்குக் கண் அறுவை சிகிச்சை நடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதனைதொடர்ந்து, அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நேற்று முன்தினம் தனது வலைப்பக்கத்தில் தனக்கு அறுவை சிகிச்சை நடக்கவிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், எதற்காக அறுவை சிகிச்சை, எப்போது நடக்கிறது என்பது குறித்து எந்தத் தகவலையும் குறிப்பிடாமல், ‘மருத்துவப் பிரச்சினைகள்…அறுவை சிகிச்சை… எழுத முடியவில்லை’ என்று மட்டும் குறிப்பிட்டிருந்தார்.

வழக்கமாக தனது வலைப் பக்கத்தில் நீண்ட பதிவுகளை எழுதும் அமிதாப், வெறும் மூன்றே வார்த்தைகளில் தனக்கு அறுவை சிகிச்சை என்று குறிப்பிட்டிருந்ததால் அவரது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் தனக்கு நடந்தது கண் அறுவை சிகிச்சை என்று அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது வலைப்பக்கத்தில் கூறியுள்ளதாவது, ‘இந்த வயதில் கண் அறுவை சிகிச்சை என்பது ஒரு சிக்கலான விஷயம், அதை மிகவும் நுட்பமான முறையில் கையாள வேண்டும். நடந்தவையும், நடக்கவிருப்பவையும் நன்மைக்கே என்று நம்புகிறேன். செய்வதற்கு எதுவுமின்றி நாள் நகர்கின்றது. எழுதவோ, படிக்கவோ முடியவில்லை. மறதியான ஒரு நிலையில் அமர்ந்திருக்கிறேன். கண்கள் பெரும்பாலும் மூடியே இருக்கின்றன. இசை கேட்க முயல்கிறேன். ஆனால், இது ஒரு திருப்திகரமான தருணமாக இல்லை’ என பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் அமிதாப் பச்சன் விரைவில் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Views: - 25

0

0