ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம் : கோவிலுக்குள்ளே நடைபெறும் வாகன சேவை!!

Author: Udayachandran RadhaKrishnan
7 October 2021, 8:17 pm
Tirupati Brahmotsavam - Updatenews360
Quick Share

ஆந்திரா : திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

தென் இந்தியாவில் நடைபெறும் கோவில் திருவிழாக்களில் பக்தர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ள திருவிழா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி நாட்களில் ஒன்பது நாட்கள் நடைபெறும் ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தை காண ஒவ்வொரு நாளும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருப்பதி மலைக்கு வருவது வழக்கம்.

ஆனால் கொரோனா காரணமாக கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாட வீதிகளை தவிர்த்து கோவிலுக்கு உள்ளேயே ஏகாந்தமாக நடத்துகிறது.

இதனால் பக்தர்கள் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளை நேரடியாக காண இயலாத நிலை நிலவுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் இன்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

கொடியேற்றத்தை முன்னிட்டு கருடாழ்வார் படம் வரையப்பட்ட மஞ்சள் கொடி, மற்றும் சக்கரத்தாழ்வார்,சேனை முதல்வர் ஆகிய உற்சவ மூர்த்திகள் ஊர்வலம் கோவிலுக்குள் நடத்தப்பட்டது.

தொடர்ந்து மாலை 5 மணி 10 நிமிடம் முதல் 5 மணி 30 நிமிடம் வரை நடைபெற்ற மீன வாகனத்துடன் கூடிய சுப லக்கனத்தில் தேவஸ்தான தலைமை அர்ச்சகர் வேத மந்திரங்கள் முழங்க கோவில் தங்க கொடிமரத்தில் கொடியை ஏற்றி வைத்தார்.

அத்துடன் பிரம்மோற்சவம் துவங்கியது. பிரம்மோற்சவ துவக்க நாளில் முப்பத்திமூன்று கோடி தேவர்களையும் நேரடியாக சென்று கருடாழ்வார் சந்தித்து அனைத்து தேவர்களும் பிரம்மோற்சவ நாட்களில் திருப்பதி மலைக்கு வந்து இருந்து அவரவர்களுக்கு உரிய பணியை செய்து கொடுக்க வேண்டும் என்று அவர்களை கேட்டு கொள்வதாக ஐதீகம்.

எனவேதான் பிரமோற்சவ துவக்க நாளன்று ஏற்றப்படும் கொடியில் கருடன் வரையப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கதாகும். பிரம்மோற்சவத்தின் முதல் வாகன நிகழ்ச்சியான பெரிய ஷேச வாகன சேவை இன்று இரவு எட்டு முப்பது மணிக்கு துவங்கி ஒன்பது முப்பது மணி வரை கோவிலுக்குள் நடைபெற உள்ளது.

Views: - 464

0

0