போதைப்பொருட்கள் சப்ளை வழக்கு : பிரபல கன்னட நடிகையுடன் தொடர்பில் இருந்தவர் கைது..!
5 September 2020, 5:43 pmசட்டவிரோதமாக போதைப் பொருட்களை சப்ளை செய்து வந்ததாக கைது செய்யப்பட்டுள்ள பிரபல கன்னட நடிகை ராகினிக்கு போதைப் பொருட்களை வழங்கி வந்த ஆப்ரிக்க நாட்டைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவில் கல்லூரி, பள்ளி மாணவர்கள் மத்தியில் பரவலாகக் காணப்பட்டு வந்த போதைப் பொருள் புழக்கம், சினிமா திரையுலகத்திலும் அதிகரித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலும் இந்தி திரைப்படத் துறையில் இருக்கும் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களின் முகங்கள் தற்போது வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், கன்னட திரையுலகினருக்கு போதைப் பொருட்களை சப்ளை செய்த விவகாரத்தில் பிரபல கன்னட நடிகை ராகினி திவேதி கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
போதைப் பொருள் சப்ளை வழக்கில் ராகினியின் நண்பர்கள் ரவிசங்கர், ராகுல் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் ராகினி செய்த குற்றம் அம்பலமாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, அவருக்கு போதைப் பொருட்கள் யாரிடம் இருந்து வருகிறது, யார் யாருக்கு இதில் தொடர்பு என விசாரணையை போலீசார் விரிவுபடுத்தினர்.
இந்த நிலையில், கன்னட நடிகை ராகினிக்கு போதைப்பொருட்கள் வழங்கி வந்த ஆப்ரிக்காவின் செனிகல் நாட்டைச் சேர்ந்த லோம் பெப்பர் சாம்பா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூரூவில் பதுங்கியிருந்த போது அவர் கைது செய்யப்பட்டார். மேலும் கேரளத்தில் கஞ்சா விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் போதைப் பொருள் பதுக்கல் மற்றும் கடத்தல் வழக்கில் மேலும் சில பிரபலங்கள் சிக்குவார்கள் என தெரிகிறது.
0
0