108 ஆம்புலன்சுக்கு தீ வைத்து தற்கொலைக்கு முயன்ற பிரபல ரவுடி!!
16 September 2020, 11:50 amஆந்திரா : பிரபல ரவுடி ஆம்புலன்சுக்கு தீ வைத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஓங்கோலை சேர்ந்தவர் சுரேஷ். ரவுடியான சுரேஷ் நேற்று இரவு ஓங்கோலில் உள்ள தாலுகா காவல் நிலையத்திற்கு வந்தார். காவல் நிலையத்தில் பணியில் இருந்த போலீசாரை கண்டபடி திட்டிய சுரேஷ், காவல் நிலையத்தின் ஜன்னலுக்கு பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடியை உடைத்து கண்ணாடி துண்டுகளால் உடலில் குத்தி காயம் ஏற்படுத்தி கொண்டார்.
சுரேஷ் உடலில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்ததால் அதிர்ச்சி அடைந்த போலீசார், 108 ஆம்புலன்சை வரவழைத்து சுரேஷை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் நிலையத்தில் இருந்து சற்று தூரம் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த நிலையில், ஆம்புலன்சில் உள்ள திரைச்சீலைகளுக்கு சுரேஷ் திடீரென்று தீ வைத்தார்.
ஆம்புலன்ஸ் உட்பகுதி தீப்பற்றி எரிந்ததால் அதிர்ச்சியடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர், அதில் இருந்த மருத்துவ உதவியாளர் ஆகியோர் ஆம்புலன்சை நிறுத்திவிட்டு கீழே குதித்தனர். ஆனால் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த ஆம்புலன்சில் உட்கார்ந்திருந்த சுரேஷ் ஜாலியாக சிரித்து கொண்டிருந்தார்.
இது பற்றிய தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து சுரேஷை எரிந்து கொண்டிருந்த ஆம்புலன்சில் இருந்து மீட்டனர். இந்த சம்பவத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் முழுவதும் எரிந்துவிட்டது. லேசான தீக்காயங்களுடன் சுரேஷ் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
கடந்த இரண்டாண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சுரேஷ் அவ்வப்போது இது போன்ற செயலில் ஈடுபடுகிறார் என்று கூறப்படுகிறது.
0
0